புரட்டாசி முதல் சனிக்கிழமை: போடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் சுவாமிக்கு தங்கக்காப்பு அலங்காரம்

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

போடி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இக்கோயிலில் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு நடத்தினர். அப்போது பெருமாளுக்கு மஞ்சள், பால், இளநீர், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் தங்கக் காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன், தலைமை அர்ச்சகர் சீனிவாச வரதன் என்ற கார்த்திக் ஆகியோர் செய்தனர்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி போஸ்பஜார் ஸ்ரீராமர் கோயிலில் நடைபெற்ற பூஜையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் தலைவர் சந்திரன், செயலர் மாரிமுத்து, பொருளாளர் ஏ.மாரிமுத்து மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயசுவாமி ஒன்னம்மாள் கோவில், போடி- ரெங்கநாதபுரம் ஸ்ரீரெங்கநாதர் கோயில், தேவாரம் ஸ்ரீரெங்கநாதசுவாமி கோவில் ஆகிய கோயில்களிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கோம்பை திருமலைராயப்பெருமாள் கோயில்: தேனி மாவட்டம் கோம்பை திருமலை ராயப்பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் வாரத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
கோம்பை நகரில் உள்ள உற்சவரான ஸ்ரீஅரங்கநாதர் கடந்த காலங்களில் மலை அடிவாரக் கோயிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சனிக்கிழமை நவராத்திரி என்பதால் உற்சவர் அமைந்துள்ள கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனால் உற்சவருக்கு பதிலாக சக்கரத்தாழ்வார் மலைக் கோயிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியிளித்தார்.
அப்போது சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் பக்தர்கள் துளசி மாலை மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். முதல் நாள் திருவிழாவில், கோயில் தக்கார் பாலகிருஷ்ணன், கோயில் நிர்வாக அலுவலர் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com