தேனி அருகே முகநூலில் பழகி பெண்ணை ஏமாற்றியவர் கைது
By DIN | Published on : 17th April 2018 07:06 AM | அ+அ அ- |
தேனி அருகே பெண்ணுடன் முகநூல் மூலம் பழகி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 25 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் நிரோஷாதேவி (23). திருப்பூர், தேக்கம்பாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் மகன் கார்த்திகேயன்(30). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் முகநூலில் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர். அப்போது, கார்த்திகேயன் நிரோஷாதேவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவரிடமிருந்து 25 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்.14-ஆம் தேதி பழனிசெட்டிபட்டிக்கு வந்திருந்த கார்த்திகேயன், நிரோஷாதேவியை நேரில் சந்தித்து, மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினாராம். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காத்திகேயன் தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் நிரோஷாதேவி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.