ஆண்டிபட்டி அருகே அடிப்படை வசதிகளின்றி மலைவாழ் மக்கள் தவிப்பு

ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிப்படை வசதிகளின்றி பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிப்படை வசதிகளின்றி பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர்.
 ஆண்டிபட்டி அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்திபெற்ற வேலப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு மேலே உள்ள மலைப் பகுதிகளில் வசித்து வந்த பழங்குடியின மக்களுக்கு வேலப்பர் கோயில் அருகே உள்ள கதிர்வேல்புரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கப்பட்டன.
 மேலும், மின்சாரம், தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி தரபட்டது. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு மலைகளில் சென்று சக்கரைவள்ளிக் கிழங்கு, நல்லாணி, பால்குலை, கடுக்காய், நெல்லிக்காய், சிறுகுறிஞ்சி, மாவலிங்கப்பட்டை, தேன் உள்ளிட்ட விளை பொருள்களை எடுத்து வந்து மூலிகை கடைகளில் விற்று வாழ்ந்து வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு 10 குடும்பங்களாக இருந்த பழங்குடியின மக்கள் தற்போது 35 குடும்பங்களாக அதிகரித்துள்ளனர். இதனால், 25 குடும்பத்தினருக்கு வீடில்லாமல் மலைபாறைகளின் இடையே கொட்டகை அமைத்தும், பாறைகளுக்கிடையேயும் வசித்து வருகின்றனர். மழைக் காலங்களில் வேலப்பர் கோயில் மண்டபத்திலும், குகையிலும் தங்கிக் கொள்கின்றனர். 
 இங்கு வசிக்கும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடும்ப அட்டைகள் இல்லை. இவர்களின் பிரதான தொழிலான தேன் எடுப்பது, கிழங்கு எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இவர்கள் சென்றாலும் அவை அந்த பருவகாலத்தில்தான் அதிகளவில் கிடைக்கும். இதனால் மற்ற நாள்களில் உணவுக்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும், பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்காகவே ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. 
இங்கு 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு காலை உணவு கிடைப்பதில்லை. இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இம்மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வருவாய்த்துறை, வனத்துறையினர் பழங்குடியினரின் குடியிருப்பு பகுதிக்கே வந்து, குறைகளை கேட்டு மனுக்களாக பதிவு செய்து மக்களிடம் கையொப்பங்களை பெற்றுகொண்டு செல்கின்றனர். 
இருப்பினும் இவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் முழுமையாக கிடைக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.  எனவே, வேலப்பர் கோயில் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com