தேனி மாவட்ட நிர்வாகம், அதிமுக சார்பில் கேரளத்துக்கு நிவாரண உதவி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம், அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு, தேனி மாவட்ட நிர்வாகம், அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
 தேனி மாவட்டம் கம்பம்மெட்டில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நிவாரணப் பொருள்களை இடுக்கி மாவட்ட வருவாய்த்துறையினரிடம் அவர் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
அண்டை மாநிலமான கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் தன்னார்வமாக முன் வந்து நிவாரணப் பொருள்களை வழங்கி வருகின்றனர். 
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், 11 லாரிகளில் 25 டன் அரிசி, 5 டன் பருப்பு, 1.5 டன் சர்க்கரை, 4 ஆயிரம் கம்பளி போர்வை மற்றும் மசாலா பொருள்களையும், தேனி மாவட்ட அதிமுக சார்பில் 6 லாரிகளில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், பால்பவுடர், காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி, உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் வர்த்தகர் சங்கம், ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான உணவு பொருள்கள் மற்றும் நிவாரண பொருள்கள் கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
 நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் லாரிகளை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உடனிருந்தார். அமைச்சர் சி.சீனிவாசன் பேசுகையில், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்க விரும்புவோர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ளலாம். கடந்த 2 நாள்களில் மட்டும் திண்டுக்கல்லிலிருந்து ரூ.45 லட்சத்துக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனது பங்களிப்பாக ரூ.5 லட்சம் வழங்க உள்ளேன் என்றார்.
போடியில்: போடியில் நாம் தமிழர் கட்சியினர் இரண்டாம் கட்டமாக ரூ.5 லட்சம் மதிப்பினாலான நிவாரண பொருள்களை சேகரித்து கேரளத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் திண்டுக்கல் மண்டல செயலாளர் சிவசங்கரன், தேனி மாவட்ட செயலாளர் அன்பழகன், போடி நகர தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
இதேபோல் போடி ரெங்கநாதபுரத்தில் கொல்கத்தா ஆடை உற்பத்தியாளர்கள் சார்பில் ஆயத்த ஆடைகள் மற்றும் நிவாரணப் பொருள்களை ஏஐடியுசி., அமைப்பு மூலம் வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com