போடி நகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

போடி நகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போடி நகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 போடியில் வீடு மற்றும் காலியிடங்களுக்கான சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சொத்து வரி உயர்வை 2011 முதல் நடைமுறைப்படுத்தி அதற்கான நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் தனித்தனியே அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. 
தற்போது சொத்துவரி செலுத்த செல்பவர்களிடம் நிலுவைத் தொகை பல ஆயிரம் ரூபாய் கேட்பதால் வரி செலுத்தாமலேயே திரும்பி செல்கின்றனர்.  இந்நிலையில் இந்த சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துவதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் போடி வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் அனைத்துக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் கழக மாவட்டச் செயலருமான ச.ரகுநாகநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்தில் வர்த்தகர் சங்கத் தலைவர் அய்யனார், செயலர் வேல்முருகன், தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி, பாமக., அதிமுக. அம்மா அணி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
 கூட்டத்தில், பொதுமக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். 2011-லிருந்து கூடுதலாக நிலுவைத் தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மேலும் தீர்மானங்களை வலியுறுத்தி போடி நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிப்பது என்றும், கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் எம்.சுவாமிநாதனிடம் அனைத்துக்கட்சிகளை சேர்ந்த ரகுநாகநாதன், சன்னாசி, சங்கரேஸ்வரன், வேல்முருகன்  உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com