கம்பம் மலையடிவாரப் பகுதியிலும் மணல் திருட்டு

கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாய நிலத்தோடு, வனத்துறை நிலத்தையும் விட்டு வைக்காமல் மணல் திருடர்களால் மணல் கடத்தப்படுகிறது.

கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாய நிலத்தோடு, வனத்துறை நிலத்தையும் விட்டு வைக்காமல் மணல் திருடர்களால் மணல் கடத்தப்படுகிறது.
தேனி மாவட்டம், கம்பம் மேற்கு வனச் சரகத்தில் உள்ளது கம்பம்மெட்டு வனப்பகுதி. இதன் அடிவாரப் பகுதிகளான, ஏகழூத்து சாலை, புதுக்குளம், கம்பம்மெட்டு செல்லும் மலைச் சாலை அடிவாரம், மணிகட்டி ஆலமரம் உள்ளிட்ட இடங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் புன்செய் பட்டா நிலங்களில் மானாவாரி பயிர்களான சோளம், மொச்சை, தட்டை, பாசிப் பயறு, துவரை, கேழ்வரகு, கம்பு, சாமை உள்ளிட்ட சிறுதானிய வகைகள் பயிரிடப்பட்டு வந்தன. 
மழை வளம் குன்றியதால், மானாவாரி நிலங்களில் சாகுபடி பெருமளவு குறைந்தது. இதனால், விவசாயப் பணிகள் நடைபெறவில்லை. இதைப் பயன்படுத்தி சிலர் நிலத்தில் உள்ள வண்டல் மண்ணை எடுப்பதாகக் கூறி, அதற்கு கீழே உள்ள மணலை எடுத்து விற்பனை செய்து வந்தனர்.
 மணல் திருடர்கள், நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பெயரில், அவரது நிலத்தில் தேவையற்ற மண்ணை எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகத்திடம் அவரின் பெயரிலேயே மனு செய்து, கனிமவளத் துறையின் அனுமதி பெறுகின்றனர். 
 குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவு ஆழத்தில் உள்ள வண்டல் மண்ணை மட்டும் எடுத்துக்கொள்ள அனுமதிச் சீட்டை பெறுகின்றனர். அதன்பேரில், தற்போது கம்பம் மேற்கு வனச்சரக மலை தொடர்ச்சியில் உள்ள அடிவாரப் பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களில் இரவு பகலாக வண்டல் மண்ணுக்கு கீழ் உள்ள மணலை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.
மூன்று அடி ஆழத்துக்கு கீழ் தோண்டக்கூடாது என்பது கனிமவளத் துறையின் உத்தரவு. ஆனால், அந்த உத்தரவை காற்றில் பறக்க விடும் மணல் கடத்தல்காரர்கள் சுமார் 20 அடி ஆழம் வரை பொக்லைன் இயந்திர வாகனங்களை வைத்து தோண்டி, டிப்பர் லாரிகளில் ஏற்றி வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும், ஒருமுறை பயன்படுத்தும் அனுமதிச் சீட்டை, நாள், நேரம் குறிப்பிடாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். 
இங்கிருந்து அதிக அளவிலான மணல் கேரள மாநிலத்துக்குச் செல்கின்றன. காரணம், கேரள மாநிலத்தில் மணல் எடுக்க தடை உள்ளது. மேலும், கம்பத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவே கேரளம் உள்ளதால், நாள்தோறும் 100-க்கும் மேலான லோடுகள் டிப்பர் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. அங்குள்ள வியாபாரிகள் கிடங்கில் குவித்துவைத்து ஒரு லோடு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்கின்றனர். இந்நிலையில், பட்டா நிலங்களுக்கு அருகிலுள்ள வனத்துறை நிலங்களிலும் மணல் திருடப்படுகிறது. 
 இது குறித்து புதுக்குளத்தைச் சேர்ந்த புன்செய் விவசாயி தங்கராஜூ (50) தெரிவிக்கையில், 20 அடிக்கும் கீழாக நிலத்தை தோண்டி மணலை எடுத்துச் செல்கின்றனர். இதனால், நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்தில் சென்றுள்ளது. மழை வந்தால் நிலத்தில் நீர் தேங்காது, மணல் எடுத்த இடத்தில் இனி விவசாயமே செய்ய முடியாது. மாவட்ட நிர்வாகம், கனிமவளத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றார்.
 சமூக ஆர்வலர் முத்துக்குமார் கூறுகையில், மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரத்திலேயே விவசாய நிலம் மற்றும் வனத் துறைக்குச் சொந்தமான இடங்களிலும் ஜோராக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இச்செயல், வன வளத்தையும், விலங்குகளையும் மறைமுகமாக அழிக்கும் முயற்சியாகும். எனவே, மாவட்ட நிர்வாகம் மணல் கடத்தலை தடுக்கவேண்டும், என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com