தேனி மாவட்டத்தில் சோதனைச் சாவடி பணிக்கு மீண்டும் உள்ளூர் காவலர்களை நியமிக்க முடிவு

தேனி மாவட்ட எல்லைகளில் காவல் துறை சார்பில் செயல்பட்டு வரும் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிக்கு சம்பந்தப்பட்ட

தேனி மாவட்ட எல்லைகளில் காவல் துறை சார்பில் செயல்பட்டு வரும் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸாரையே மீண்டும் நியமிக்க மாவட்ட காவல் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தேவதானப்பட்டி, போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய எல்லைப் பகுதிகளில் மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் சோதனைச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கண்காணிப்பு பணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களை, காவல் ஆய்வாளர் நியமிக்கிறார். இந்நிலையில், மாவட்ட எல்லையில் உள்ள காவல் சோதனைச் சாவடிகளில் பயணிகள் வாகனம், சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் போலீஸார் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. தேவதானப்பட்டி காவல் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வரதராஜன், வாகன ஓட்டுநரிடம் பேரம் பேசி வசூலில் ஈடுபட்ட செல்லிடப்பேசி விடியோ காட்சி, கட்செவி அஞ்சல் மூலம் பரவியது.இதையடுத்து, அங்கு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் வரதராஜனை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவிட்டார். மேலும், அனைத்து இடங்களிலும் உள்ள காவல் சோதனைச் சாவடிகளிலும் உள்ளூர் காவல் நிலைய போலீஸாருக்குப் பதிலாக, ஆயுதப் படைப் பிரிவு காவலர்கள் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஆயுதப் படைப் பிரிவில் போதிய எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாததால், அவர்களை சோதனைச் சாவடி பணியில் தொடர்ந்து ஈடுபடுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சோதனைச் சாவடி கண்காணிப்பு பணிக்கு சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலைய போலீஸாரையே மீண்டும் நியமிக்க மாவட்ட காவல் துறை நிர்வாகம் முடிவு  செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் கூறுகையில், உள்ளூர் காவல் நிலையங்களில் பணியில் உள்ள  போலீஸாரின் பட்டியலை பெற்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப் பிரிவு மூலம் சுழற்சி முறையில் உள்ளூர் போலீஸார் சோதனைச் சாவடி கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com