அய்யம்பட்டியில் பிப்.29 இல் ஜல்லிக்கட்டு: காளைகளும், காளையர்களும் தீவிரப் பயிற்சி 

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பிப்ரவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடக்க உள்ளதையடுத்து, அப்பகுதி காளைகளும், மாடுபிடி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பிப்ரவரி 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடக்க உள்ளதையடுத்து, அப்பகுதி காளைகளும், மாடுபிடி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
     பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவுக்கான முன்னேற்பாடுகள், மதுரை, தேனி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 
அதன்படி, தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் அருகேயுள்ள அய்யம்பட்டி மற்றும் பல்லவராயன்பட்டியில் பல ஆண்டுகளாக பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும்  ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
    தை மாதம் பொங்கல் பண்டிகை  முடிந்து சில நாள்களில் அங்குள்ள ஸ்ரீ ஏழைகாத்தம்மன், வல்லடிக்கார சுவாமி கோயில்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
   இந்நிலையில், அய்யம்பட்டியில் பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட ஊர் பொதுமக்கள் சார்பில்,  மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலத்திடம் பரிந்துரை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அருகேயுள்ள பல்லவராயன்பட்டியிலும் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெறும்.
    அய்யம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு, அதன் உரிமையாளர்கள் நீச்சல் மற்றும் மணல், செம்மண் பகுதிகளில் சிறப்புப் பயிற்சியும் அளித்து வருகின்றனர். அதேநேரம், அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில கலந்துகொண்டு பரிசை பெறவேண்டும் என்பதற்காக, மாடுபிடி வீரர்கள் பயிற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 
    கடந்தாண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறாத நிலையில், இங்குள்ள ஜல்லிக்கட்டு மாடுகளை விற்பனை செய்துவிட்டனர். அதன்பின்னர் தடை நீக்கப்பட்டதால், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு அதிகரித்துள்ளது.
   தற்போது, அய்யம்பட்டி மற்றும் பல்லவராயன்பட்டியில் மட்டுமே 60-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிக்குத் தயாராக உள்ளன. அய்யம்பட்டி மற்றும் பல்லவராயன்பட்டியில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டில் கலந்து கொள்ள, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, அக்கிராமத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com