தேனி மாவட்டத்தில் சமத்துவப் பொங்கல் விழா

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ மற்றும் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ மற்றும் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகள் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச் செயலர் ராஜமோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி இணைச் செயலர் காசிபிரபு, கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மாணவ, மாணவிகள் சமத்துவப் பொங்கலிட்டு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பேணிக்காக்க உறுதியேற்று இப்பொங்கல் விழாவை கொண்டாடினர். கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழா: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ஏ.ஆர்.டி.மையம், ஹெச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சமத்துவப் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் ந.வெங்கடாசலம் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருநாவுக்கரசு, மாவட்ட எஸ்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் ஜெஸிந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கம்பம்: கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில் பொங்கல் திருநாளையொட்டி சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை, விளையாட்டு மைதானத்தில் மாணவிகள் சார்பில் கொண்டாடப்பட்டது.
கல்லூரி செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இணைச் செயலர் ரா.வசந்தன் முன்னிலை வகித்தார். மாணவிகள் பொங்கல் வைத்து, கல்லூரி வளாகத்தில் உள்ள கணபதி கோயிலில், ஸ்ரீபாலகங்காதரநாத சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் செய்தனர். முதல்வர் ஜி.ரேணுகா நன்றி கூறினார்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் குச்சனூர், மார்க்கையன்கோட்டை பேரூராட்சிகளில் புகையில்லா பொங்கல் பண்டிகை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
குச்சனூர் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பதாகைளை ஏந்திச் சென்றனர். அதேபோல், சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவும் போகி பண்டிகையின் போது தெருவில் பழைய பொருள்களை தீயிட்டு எரிக்கக் கூடாது, டயர்களை எரித்தால் சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்கப்படும், தனிநபர் கழிப்பிடம் கட்டுவோம். நோயில்லா வாழ்க்கை வாழ்வோம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இதில், குச்சனூர் பேரூராட்சி செயலர் பாலசுப்பிரமணி மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள், குச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மார்க்கையன்கோட்டை பேரூராட்சியிலுள்ள எம்.ஆர்.வி. நடுநிலைப் பள்ளியில் புகையில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில், மாணவ, மாணவிகளுக்கு புகையில்லா பொங்கல் குறித்த விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மார்க்கையன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு பரிசுகளை வழங்கினார். இதில், பள்ளி ஆசிரியர்கள், பேரூராட்சிப் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி: உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியின் விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவும் , சமத்துவ பொங்கல் விழாவும் நடைபெற்றன.
இக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கல்லூரிச் செயலரும், தாளாளருமான தர்வேஸ் முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். இவர்களுடன் முன்னாள் கல்லூரி முதல்வர்களும் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் பங்குபெற்றவர்கள் புறா, பலூன் மற்றும் மலர்களை வானில் பறக்க விட்டனர். விளையாட்டு திருவிழாவாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியகள், கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் கைப்பந்து, கூடைப்பந்து மேஜைப்பந்து, இறகுப் பந்து, ஓட்டப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.
சமத்துவ பொங்கல் விழா: கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமத்துவப்பொங்கல் விழாவில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழரின் பாரம்பரியமான உடையான வேட்டி மற்றும் சேலை அணிந்து மாணவ, மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர். அனைத்து துறைகளை சேர்ந்த மாணவிகள் தனித்தனியாக சமத்துவப்பொங்கல் வைத்தனர்.
பெரியகுளம்: பெரியகுளம் மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் இசாக்பிஜே தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் ஆனந்த் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான கேஎம்சி குரூப் தலைவர் முத்துகோவிந்தன் மற்றும் முல்லை அரிமா சங்க முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
இவ்விழாவில் கல்லூரியை சேர்ந்த ஜோபே அலெக்ஸ், பிஜே மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com