தேனி மாவட்டத்தில் திமுகவினர் சாலை மறியல்: 301 பேர் கைது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய தவ்ஹித் ஜமாத் ஆகியவற்றின்   சார்பில் 7 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 301 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேனியில், நேருசிலை அருகே திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 67 பேரை போலீஸார் கைது செய்தனர். பெரியகுளத்தில் இந்திய தவ்ஹித் ஜமாத் நகரச் செயலர் அபுபக்கர் சித்திக் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேர், திமுக நகர பொறுப்பாளர் அபுதாஹிர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 19 பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் நகாரத்தினம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடியில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே திமுக சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.லட்சுமணன் தலைமையில்  சாலை மறியலில் ஈடுபட்ட 48 பேர், ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர்.சிலை அருகே திமுக ஒன்றியச் செயலர் மகாராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 33 பேர், கம்பத்தில் திமுக நகரச் செயலர் செல்லப்பாண்டி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் சத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போடியில், தூத்துக்குடி துப்பாக்கிச் சுடு சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நகர ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் இயல்பு நிலை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல செயல்பட்டன. பேருந்துகள்இயங்கின. 

கூடலூரில் கடையடைப்பு
தூத்துக்குடி நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து தேனி மாவட்டம் கூடலூரில் வெள்ளிக்கிழமை முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கூடலூர் நகர திமுக செயலாளர் சி.லோகன்துரை தலைமையில் சாலை மறியல் செய்த 30 பேரை  போலீஸார் கைது செய்தனர். கம்பம் நகரில் கடைகள் எதுவும் அடைக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com