தேனி மாவட்டத்தில் நிபா' வைரஸ் பாதிப்பு இல்லை: மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பில்லை என்றும், அதே நேரத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு தேவை எனவும் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் சனிக்கிழமை தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பில்லை என்றும், அதே நேரத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு தேவை எனவும் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பினால் 13 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகத்திலும் நிபா வைரஸ் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போடி மெட்டு பகுதி, முந்தல் கிராமத்தில் சனிக்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.
பின்னர் போடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், படுக்கை வசதி, மருந்துகள் இருப்பு, ரத்த வங்கி ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் மகப்பேறு பிரிவு, தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட பிரிவையும் பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:
கேரள - தமிழக எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். போடிமெட்டு, கம்பம் மெட்டு பகுதியில் வாகனச் சோதனை மூலம் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு அங்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. பரிசோதனை செய்யும் குழுவினருக்கும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்.
சாதாரண காய்ச்சல் என தெரிந்தால் கூட உடனடியாக அரசு மருத்துவமனையிலோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள், கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
போடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பிரிவில் பெண் மருத்துவர் ஒருவர் மட்டுமே உள்ளார். அவர் விடுமுறை மற்றும் பொறுப்புப் பணிகளுக்கு வெளியிடங்களுக்கு சென்று விடும் சூழல் உள்ளது. எனவே, கூடுதல் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றும், கூடுதலாக துப்புரவுப் பணியாளர்கள், மின் விளக்கு வசதி வேண்டும் என்றும் நோயாளிகள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
ஆய்வின்போது உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சென்னியப்பன், போடி வட்டாட்சியர் கே.ஆர்த்தி, போடி நகராட்சி ஆணையாளர் மு.சுவாமிநாதன், போடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com