முதல்போக சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்க வாய்ப்பு

முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் முதல் வாரம், முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் முதல் வாரம், முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறினார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட வன அலுவலர் கௌதம், மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகமது அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியது: கடந்த 2016-17-ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை செலுத்தியிருந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். கடமலைக்குண்டுவில் வாரச் சந்தை அமைக்க வேண்டும். வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசுகையில், கண்மாய், நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடைகளை ஆய்வு செய்து, இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 2016-17-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளில், இது வரை நெல் விவசாயிகளுக்கு ரூ.4.75 லட்சமும், மக்காச்சோளம் விவசாயிகளுக்கு ரூ.15 லட்சமும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு மற்றும் காப்பீட்டு நிறுவனம் சார்பில் மேலும் ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகை ஓரிரு வாரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல்போக நெல் சாகுபடிக்காக வழக்கம் போல வரும் ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித்துறையினர் விவசாயிகளுடன் ஆலோசித்து அரசுக்கு பரிந்துரை செய்வர். நிலச் சீர் திருத்தப் பணிக்கு கண்மாய்களில் மண் அள்ளும் விவசாயிகளுக்கு நடைச் சீட்டு வழங்குவதை முறைப்படுத்தவும், தர்மாபுரி அரசு மேல்நிலைப் பள்ளி கட்டட பராமரிப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கடமலைக்குண்டுவில் வாரச் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. வனப் பகுதியில் மலை மாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச் சீட்டு வழங்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com