ஆண்டிபட்டி அருகே அரசு விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக மாணவிகள் புகார்

தேனி மாவட்டம்,  ஆண்டிபட்டி அருகே செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் தரமில்லாத

தேனி மாவட்டம்,  ஆண்டிபட்டி அருகே செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனால் விடுதியில் தங்கி பயில கல்லூரி மாணவிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே சண்முக சுந்தரபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கம்பம், போடி, வருசநாடு உள்ளிட்ட மலைக் கிராமங்களில் இருந்து 39 மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர். இவர்கள் மதுரை காமராஜர் உறுப்பு கல்லூரி, அரசு தொழில் நுட்பக் கல்லூரி, மற்றும் செவிலியர் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் 1 பொறுப்பாளர், 2 சமையலர், 1 இரவு காவலர் உள்ளனர். இந்நிலையில் விடுதியில் வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பதாக மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அங்கு தங்கி பயிலும் மாணவிகள் கூறியது:  இங்கு உணவுக்கு சந்தைகளில் வீணாகும் காய்கறிகளையே பயன்படுத்துகின்றனர். அதே போல் மாதம் ஒன்றிற்கு ஒரு மாணவிக்கு 20 முட்டைகள் வழங்க வேண்டிய இடத்தில் 4 முட்டைகள் தான் வழங்குகின்றனர். அசைவ உணவுகளும் முழுமையாக வழங்குவதில்லை. விடுதியில் தண்ணீரை சுத்தம் செய்யும் கருவி அடிக்கடி பழுதாவதால் தரமற்ற குடிநீரையே பருக வேண்டிய நிலை உள்ளது. எங்களுக்கு வழங்கப்படும் உணவு பெரும்பாலும் சுகாதாரமில்லாமல் உள்ளது. முதல் நாள் சமைக்கும் உணவே மறுநாள் வரை வழங்கப்படுகிறது. 
மாணவிகளுக்கு  அன்றாட தேவைகளான சோப்பு, எண்ணெய் , பற்பொடி உள்ளிட்டவைகளை மாதம்தோறும் அரசு இலவசமாக தருகிறது. ஆனால் இவை அனைத்தும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இந்த விடுதியில் சுற்றுச்சுவரும் முழுமையாக இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும் இங்கிருந்து பேருந்து நிறுத்தத்துக்கு 2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விடுதியில் போதிய வசதிகள் இல்லாததால் சிலர் தற்போது உறவினர்கள் வீடுகளில் தங்கி படித்து வருகிறோம் என்றனர்.
எனவே விடுதியில் தரமான உணவு வழங்கிடவும், சுற்று சுவர், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாணவிகளும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com