மது போதையில் லாரியை இயக்கி இருவர் உயிரிழப்புக்கு காரணமான ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஆண்டிபட்டியில் மது போதையில் லாரியை இயக்கி இருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, தென்காசி லாரி ஓ

ஆண்டிபட்டியில் மது போதையில் லாரியை இயக்கி இருவரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த, தென்காசி லாரி ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
     திருநெல்வேலி மாவட்டம், தென்காசியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் முத்தையா (55), லாரி ஓட்டுநர். இவர், கடந்த 2016 மார்ச் 6-ஆம் தேதி தேனியிலிருந்து மதுரைக்கு லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, முத்தையா மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.     ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி,  சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில், ஆண்டிபட்டி, சக்கம்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் பாண்டியன் மற்றும் ஆண்டிபட்டி, பி.எஸ்.என்.எல். அலுவலகம் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    மேலும், திருநெல்வேலி மாவட்டம், தேவிபட்டினத்தைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி மகாலட்சுமி (25), அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மனைவி வீரலட்சுமி, கமல்ராஜ் மகன் விபின்ராஜ் (14), ஆண்டிபட்டி சக்கம்பட்டியைச் சேர்ந்த சங்கர் மனைவி கௌரி ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.
    இந்த விபத்து குறித்து, ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, மது போதையில் லாரியை இயக்கி விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் முத்தையாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.    வழக்கை விசாரித்த நீதிபதி வி. சீனிவாசன், மது போதையில் லாரியை இயக்கி இருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த முத்தையாவுக்கு, ஒவ்வொரு இறப்புக்கும் தலா 7 ஆண்டுகள் வீதம் சிறைத் தண்டனை விதித்தும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com