விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை: கம்பம் பகுதியில் இயந்திரங்கள் மூலம் முதல்போக நெல் அறுவடை

தேனி மாவட்டம், கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் முதல்போக நெல் அறுவடை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளதாக்குப் பகுதியில் முதல்போக நெல் அறுவடை வெள்ளிக்கிழமை தொடங்கியது. விவசாயக் கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறையால், அறுவடைப் பணிகள் இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை முல்லைப் பெரியாறு பாசனத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 14, 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 
கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால், முதல்போக நன்செய் சாகுபடி நடைபெறவில்லை. தற்போது, வடகிழக்குப் பருவமழை கைகொடுத்ததால்,  இரண்டாம்போக சாகுபடி மட்டுமே நடைபெற்றது. இதனிடையே, கடந்த  ஜூலை மாதம் முதல்போக சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக, வெள்ளிக்கிழமை கம்பம் அருகேயுள்ள சாமாண்டிபுரம்  பகுதியில் நெல் அறுவடை தொடங்கியுள்ளது.
விவசாயிகள் இயந்திரத்தின் மூலம் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, குழிக்கு 25 முதல் 27 மூட்டை வரை மகசூல் மட்டுமே கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டு அறுவடையை காட்டிலும் குறைவான மகசூலாகும். மேலும், 62 கிலோ எடை கொண்ட  ஒரு மூட்டை ரூ.880- க்கு விற்பனையாகியது.      மகசூல் குறைவு, டீசல் விலை உயர்வு, அறுவடை இயந்திரத்தின் வாடகை உயர்வு, நெல் கொள்முதல் விலை குறைவு போன்றவைகளால் இந்த ஆண்டு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என, நன்செய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.      இது குறித்து விவசாயி சுகுமார் கூறியது: விவசாயத் தொழிலாளர்கள் கேரளத்துக்கு வேலைக்குச் சென்று விடுவதால், நன்செய் நிலங்களில் விவசாய வேலைகளுக்கு  ஆள்கள் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி இயந்திரங்கள் மூலம் அறுவடைப் பணிகளை செய்து வருவதால், விவசாயிகளுக்கு  குறைந்த லாபமே கிடைக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com