மழையால் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், புதிய வீடுகள் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக


தேனி மாவட்டத்தில் மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், புதிய வீடுகள் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார்.
போடி பகுதியில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த மழையில் போடி, தேவாரம், உப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்தது. இதில் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்தது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது போடி ராசிங்காபுரம் அருகே மணியம்பட்டி கிராமத்தில் சேதமடைந்த வீடுகள், சிலமலை அருகே மல்லிங்காபுரம் கிராமத்தில் சேதமடைந்த வீடுகள், தேவாரம் பேரூராட்சி பிரம்பு வெட்டி ஓடை, முத்தையன்செட்டிபட்டி கள்ளர் பள்ளியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் ஆகியவற்றை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். பின்னர் பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வுக்கு பின்னர், அவர் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறையில் ஒரு வீடும், பெரியகுளம் வட்டம் டி.கல்லுப்பட்டி, சருத்துப்பட்டி, அழகர்சாமிபுரம், தென்கரை, இ.புதுக்கோட்டை கிராமங்களில் 6 வீடுகளும், போடி வட்டம் போ.அம்மாபட்டி, ராசிங்காபுரம், சிலமலை, உப்புக்கோட்டை, மேலச்சொக்கநாதபுரம் ஆகிய கிராமங்களில் 16 வீடுகளும், உத்தமபாளையம் வட்டம் மார்க்கையன்கோட்டை கிராமத்தில் 3 வீடுகளும் என மொத்தம் 26 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மழையால் முழுமையாக வீடு சேதமடைந்தால் ரூ.5000 வீதமும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4,100 வீதமும் வீட்டின் உரிமையாளர்களுக்கு வங்கிக் கணக்கில் இணையதளம் மூலம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மழையினால் சேதமடைந்த வீடுகளில் தகுதிவாய்ந்த நபர்களுக்கு முதல்வரின் பசுமை வீடுகள் திட்டம் மற்றும் பிரதமரின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
ஆய்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் எம்எல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.திலகவதி, உத்தமபாளையம் சார் ஆட்சியர் ஆர்.வைத்தியநாதன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சு.சேதுராமன், முன்னாள் எம்.பி. எஸ்.பி.எம்.சையதுகான், மாவட்ட கோ-கோ விளையாட்டு கழகத்தலைவர் ஒ.ப.ரவீந்தரநாத்குமார், வட்டாட்சியர்கள் உதயராணி (உத்தமபாளையம்), ஆர்த்தி (போடி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com