சபரிமலை விவகாரம்: திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சியினர் சாலை மறியல்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 27 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சபரிமலை வழிபாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராகவும்,  சபரிமலை  செல்லும்  பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 10 முதல் 50 வயதிற்குள்பட்ட பெண்கள் சபரிமலை செல்ல எதிர்ப்பு தெரிவித்தும் திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் எம்ஜிஆர் சிலை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலர் ரவிபாலன் தலைமை வகித்தார். தென்மண்டலத் தலைவர் வே.தர்மா முன்னிலை வகித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க தவறிய கேரள அரசைக் கண்டித்தும், இந்த விவகாரத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். 
பின்னர், பேருந்து நிலையம் முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட ரவிபாலன், தர்மா உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். 
ஆண்டிபட்டியில்... இதேபோல் ஆண்டிபட்டியில் இந்து அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆண்டிபட்டியில் உள்ள நன்மை தருவார் கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர். முன்னதாக கோயிலில் இருந்து முத்து வன்னியன் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தை பாஜக மாவட்ட பொறுப்பாளர் கண்ணன் தொடக்கி வைத்தார். ஊர்வலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து முருகன் திரையரங்கம் அருகே நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணி கணபதி தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.பி.எம். செல்வம் முன்னிலை வகித்தார்.  
பாஜக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் கண்ணாயிரம் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் மொக்கராஜ் உள்பட ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் கலந்து கொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யவும், கேரள அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com