ஹைவேவிஸ் - மேகமலையில் கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் சாவு: கால்நடை மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தல்

ஹைவேவிஸ் - மேகமலை கிராமங்களில் கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.

ஹைவேவிஸ் - மேகமலை கிராமங்களில் கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. எனவே, இப்பகுதிக்கு கால்நடை மருத்துவர்களை நியமித்து நோயை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலானோர் தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். மேலும், ஆடு மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர்.  
இந்நிலையில் மலைக்கிராமங்களில் உள்ள கால்நடைகள் கடந்த சில நாள்களாக கோமாரி நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வெண்ணியாறு கிராமத்தில் அதிகளவில் இந்நோய் தாக்கி 2 மாடுகள் இறந்துவிட்டன. 
 இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது:
 கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு மாடு வளர்த்தல் பொருளாதாரத்துக்கு சற்று வலுசேர்க்கிறது. இந்நிலையில் கோமாரி நோய் தாக்குதலால் மாடுகள் நடக்க முடியாத நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற 
இடத்திலேயே படுத்து விடுகின்றன. 
மீண்டும் அவற்றால் எழுந்திருக்க இயலவில்லை. தற்போது இந்த மலைப்பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் மாடுகளை வீட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை உள்ளது.
இதனால் பல மாடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. இப்பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்லும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தும் வராமல் அலட்சியமாக உள்ளனர். 
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த மலைக் கிராமங்களுக்கு உடனே கால்நடை மருத்துவர்கள் மூலம் சிறப்பு முகாம் 
அமைத்து நோய் தாக்கிய கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் இப்பகுதிக்கு நிரந்தரமான கால்நடை மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com