தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் விநாயகர் சிலை ஊர்வலம்

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 1,200க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கன்னிவாடி, குஜிலியம்பாறை பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், அப்பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் வெள்ளிக்கிழமை கரைக்கப்பட்டன.
திண்டுக்கல் நகர் மற்றும் ஒன்றிய அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்கான நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கியது. முன்னதாக அங்கு நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் பேசினார். இக் கூட்டத்தில் அதன் மாவட்ட பொதுச் செயலர் சங்கர் கணேஷ், மாவட்ட செயலர்கள் சஞ்சீவிராஜ், வீர திருமூர்த்தி, பாலசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கோட்டைக்குளம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கரைக்கப்பட்டன.
வடமதுரையில்... வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 31 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. வடமதுரை அடுத்துள்ள தும்மலக்குண்டு நரிப்பாறை பகுதியில் உள்ள நீர்நிலையில் அவை கரைக்கப்பட்டன.
போடியில்... நகர் மற்றும் ஒன்றியம், குரங்கனி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. போடி நகரில் அமைக்கப்பட்ட 46 சிலைகள், ஒன்றியப் பகுதியில் அமைக்கப்பட்ட 12 சிலைகள் ஆகியவை பேருந்து நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் வெள்ளிக் கிழமை இரவு விநாயகர் சிலை ஊர்வலம் தேவர் சிலையில் தொடங்கி திருவள்ளுவர் சிலை, கட்டபொம்மன் சிலை, போடி புதூர் வழியாக கொட்டகுடி ஆற்றில் கொண்டு சென்று கரைக்கப்பட்டன. குரங்கனி, முந்தல் கிராமங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அப்பகுதியில் உள்ள கொட்டகுடி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதேபோல் தேவாரத்தில் வைக்கப்பட்டிருந்த 28 விநாயகர் சிலைகள் மார்க்கையன்கோட்டை அருகே முல்லை பெரியாற்றில் கரைக்கப்பட்டன.
சின்னமனூரில்... இந்து முன்னணி சார்பில் 201 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இவை சனிக்கிழமை மாலை அங்குள்ள முத்தாலம்மன் கோயில் முன் கொண்டு வரப்பட்டு, பின்னர் எம்.ஜி.ஆர் திடலிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் குற்றால ராஜன் ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். விநாயகர் விழாக் கமிட்டி அமைப்பாளர் வெள்ளச்சாமி முன்னிலை வகித்தார். ஊர்வலம் மார்க்கயன் கோட்டை விலக்கு, சீப்பாலக்கோட்டை சாலை, கண்ணாடி முக்கு, ரத வீதிகள் வழியாகச் சென்று முல்லைப் பெரியாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஒட்டன்சத்திரத்தில்... இந்து மக்கள் கட்சி சார்பில் 32 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக சனிக்கிழமை ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று விருப்பாச்சி தலையூற்றில் கரைத்தனர். முன்னதாக ஊர்வலத்தை திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் கே.பி.நல்லசாமி தொடக்கி வைத்தார். இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நெல்லை செ.வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் வெ.ரவிபாலன்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பால்ராஜ்,திண்டுக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் மா.மனோஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பழனியில்... அடிவாரம் பாதவிநாயகர் கோயில் முன்பாக சனிக்கிழமை ஹிந்து சக்தி சங்கமம் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், விழா முதன்மை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். ஊர்வலம் சன்னதி வீதி, பாளையம், பேருந்து நிலையம், கடைவீதி மற்றும் நான்கு ரத வீதிகள் வழியே சென்று சண்முகநதியில் சிலைகள் கரைக்கப்பட்டன. இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com