சாத்தூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

சாத்தூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவ ட்டம், சாத்தூர் அதிகளவில் கிராமங்களை உள்ளடக்கிய பகுதி.   இங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரசு மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு, சாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து மருத்துவச் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  மேலும் உள்நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாத்தூர் பிரதான சாலையிலிருந்து  சுமார் 500 மீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது.  இந்த சாலையில் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் நோயாளிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்திலும்,  மருத்துவமனைக்கு செல்லும் சாலையிலும் அதிகளவில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதால், நோயாளிகள்  அச்சத்துடனே நடந்து செல்ல வேண்டியுள்ளது.
மருத்துவர் பற்றாக்குறை:சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு எலும்பு முறிவு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொதுநல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், பல் மருத்துவர் உள்ளிட்ட 19 மருத்துவர்கள் தேவை ஆனால், தற்போது 7 மருத்துவர்கள் மட்டும்  பணியாற்றி வருகின்றனர். அதிலும் 2 மருத்துவர்கள் மாற்றுப் பணிக்காக வெளியே செல்கின்றனர். இதனால் 5 மருத்துவர்கள் மட்டும் பணியாற்றி வரும் நிலையில், சாத்தூர் பகுதியில் நேரிடும் விபத்துகளிலும், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துகளில் காயமடைந்து வரும் நேயாளிகள் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மருத்துவமனை அருகில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: அரசு மருத்துவமனையில் பயன்படுத்தபடும் மருத்துவக் கழிவுகளும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பைகள் அனைத்தும் மருத்துவமனை சுற்றுசுவர் அருகிலேயே கொட்டபடுகின்றன. மேலும் இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை தீவைத்து எரிப்பதால்,  மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
ஆம்புலன்ஸ் வசதி: சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி  தீ விபத்து மற்றும் இப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன.  இந்த விபத்தில் காயமடையும் நபர்களைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே, அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்கள் பற்றாகுறை உள்ளது. அதனால் மருத்துவமனையில் நடைபெறும் துப்புரவு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
 எனவே மருத்துவமனை நிர்வாகமும், பஞ்சாயத்து நிர்வாகமும் பொதுமக்கள் நலன் கருதி அரசு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com