ராஜபாளையம் அருகே மதுபானக் கடை சூறை: ரூ. 4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதம்

ராஜபாளையம் அருகே அரசு மதுபானக் கடையை  பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சூறையாடியதால், சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜபாளையம் அருகே அரசு மதுபானக் கடையை  பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சூறையாடியதால், சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
        விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த மதுபானக் கடை,  இரண்டு நாள்களுக்கு முன் சங்கரபாண்டியபுரம் அடுத்துள்ள கிழவன்கோவில் என்ற பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. ஆனால், கடை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் வீடுகள், மருத்துவ துணி சுத்திகரிக்கும் ஆலைகள், குறவர் காலனி,  இலங்கை அகதிகள் முகாம் உள்ளிட்ட  பல்வேறு குடியிருப்புகள் உள்ளன.
       இந் நிலையில், 2 நாள்களுக்கு முன் இப்பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப் பட்டது. வியாழக்கிழமை இரவு, இக் கடையில் மது அருந்திய சிலர் அவ்வழியாகச் சென்ற  சிறுவனிடம்  தகராறில் ஈடுபட்டதுடன், கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.     இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், வெள்ளிக்கிழமை காலை மதுபானக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வராததை அடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மதுபானக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த  மதுபாட்டில் பெட்டிகளை வெளியே எடுத்து வந்து உடைத்தனர். இதனால், அப் பகுதி முழுவதும் மது நாற்றம்  வீசியது.    இச் சம்பவத்தைப் பயன்படுத்தி, அப் பகுதி வழியாகச் சென்ற ஆண்கள் சிலர் உடையாத மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். ஆனால், அவர்களிடமிருந்து பெண்கள் மதுபாட்டில்களை பிடுங்கி உடைத்ததால், அப் பகுதியே போர்களமாகக் காணப்பட்டது.     மது பாட்டில்கள் அனைத்தையும் உடைத்த பின்னர், பொதுமக்கள் புறப்பட்டுச் சென்றனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்து காவல் துறையினர் பார்வையிட்டனர்.
புதிய கடை என்பதால், இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ. 4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டதாக, கடையின் மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com