சாத்தூரில் மழை நீர் தேங்கி நோய் பரவும் அபாயம்

சாத்தூர் பகுதியில்  பெய்து வரும் மழை காரணமாக, தெருக்களில் மழை நீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாத்தூர் பகுதியில்  பெய்து வரும் மழை காரணமாக, தெருக்களில் மழை நீர் தேங்கி டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
      விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் அவ்வப்போது காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள வைப்பாறு, குளம் மற்றும் கண்மாய்களுக்கு ஓரளவுக்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. இதனால், இந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
     ஆனால், சாத்தூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியான மாரியம்மன் கோயில் தெரு, முருகன் கோயில் தெரு, மேலகாந்தி நகர், குருலிங்காபுரம், அண்ணாநகர், பிரதான சாலை, முக்குராந்தல், வடக்குரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் முறையான வாருகால், சாலை வசதிகள் இல்லாததால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இப் பகுதி மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
     தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
     தற்போது, சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை அமைக்கத் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் பெரியார் நகர், சிதம்பரம் நகர், மேலகாந்தி நகர், காமராஜபுரம், ஒரிஜினல் கிணற்று தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்தப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்காக குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு தெருக்களில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால், இரவு நேரங்களில் விபத்து ஏற்படுகிறது.மேலும், இந்த குழிகளிலும் மழை நீர் தேங்கி துர்நாற்றும் வீசி கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
     அதேபோல், சாத்தூர் பை-பாஸ் சாலையில் உள்ள அணுகுசாலையில் வாருகால் வசதி செய்யப்பட்டும், அதை நெடுஞ்சாலைத் துறையினர் முறையாகப் பராமரிக்காத நிலையில், இருபுறமும் உள்ள அணுகுசாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதில், கழிவுநீரும் கலப்பதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி  தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
   இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
    இது குறித்து சாத்தூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியது: சாத்தூர் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து தடைபடுகிறது. மேலும், ஒரு சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கியுள்ளதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், ஏராளமானோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
    எனவே நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com