விருதுநகரில் 100 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கல்: 15,568 மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு

விருதுநகரில், உலக மண்வள தினத்தை முன்னிட்டு 100 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வழங்கினார்.

விருதுநகரில், உலக மண்வள தினத்தை முன்னிட்டு 100 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வழங்கினார். அப்போது 404 வருவாய் கிராமங்களில் 15,568 மண் மாதிரிகள் சேகரிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
   விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்களில் புதன்கிழமை வேளாண்துறை சார்பில் உலக மண்வள தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை வகித்து விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி  ஆட்சியர் பேசியதாவது:
  விவசாய நிலங்களில் மண்மாதிரிகள் சேகரித்து, அதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உரப்பரிந்துரை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆய்வின் முடிவில் மண்ணிலுள்ள தழை, மணி, சாம்பல் சத்து போன்ற முக்கிய சத்துக்களையும் கால்சியம், மெக்னீசியம், சல்பர் போன்ற இரண்டாம் நிலை சத்துக்களையும் தாமிரம், துத்தநாகம், போரான், மாங்கனிசு போன்ற நுண்ணுட்ட சத்துக்களையும் கண்டறிந்து மண்ணின் அமில, களர், உவர் மற்றும் சுண்ணாம்பு தன்மையை பொறுத்து மண்வள அட்டை வழங்கப்படுகிறது. மேலும், நஞ்சை நிலம், மானாவாரி நிலம், மர பயிர்களுக்கு என தனத்தனியாக மண் மாதிரி பரிசோதனை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2017-18-இல், 404 வருவாய் கிராமங்களில் 15,568 மண் மாதிரிகள் சேகரிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலமாக நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனத்தின் மூலம் ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் சென்று அங்குள்ள வருவாய் கிராமங்களில் முகாமிட்டு வருகின்றனர். எனவே, விவசாயிகள் நிலத்தில் உள்ள மண்மாதிரியை கொண்டு வந்து இம்முகாமில் உள்ள களப்பணியாளர்களிடம் கொடுத்து, இந்த மண்ணில் எந்த பயிர் வகைகள் பயிர் செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர். 
   முன்னதாக, வேளாண்மைத் துறை சார்பில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மீசலூர் கிராமத்தைச் சேர்ந்த வேதவல்லி என்ற விவசாயிக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்  ரூ.1,69,320 (மானியம் ரூ.75,000) மதிப்பிலான பவர் டில்லார் இயந்திரத்தை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) சுப்பிரமணியன், துணை இயக்குநர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com