அரசுப் பேருந்து தீப்பற்றியதில் உயிரிழந்த பொறியாளர் குடும்பத்துக்கு ரூ.17.62 லட்சம் வழங்க உத்தரவு

அரசுப் பேருந்தில் பயணம் செய்யும்போது, பேருந்து தீப்பற்றி உயிரிழந்த பொறியாளர் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.17.62 லட்சம் இழப்பீடு

அரசுப் பேருந்தில் பயணம் செய்யும்போது, பேருந்து தீப்பற்றி உயிரிழந்த பொறியாளர் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.17.62 லட்சம் இழப்பீடு வழங்க, ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு-நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் வியாழக்கிழமை உத்தரவிட்டன.
      ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பில் வெள்ளாளர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (38). பொறியாளரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், கடந்த 29.7.2008-ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயணித்துள்ளார். 
    பேருந்து கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள ஏ.பாறைபட்டி காவல் சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே சிமென்ட் ஏற்றி வந்த லாரி அரசுப் பேருந்து மீது மோதியது. 
அதேசமயம்,  பின்னால் வந்த கார் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றதில்,  பேருந்தின் டீசல் டாங்க் மீது மோதியது. இதில், டீசல் டாங்க் வெடித்து, பேருந்து தீப்பற்றியது. இதில், தீக்காயமடைந்த ரவிச்சந்திரன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
     அதையடுத்து, ரவிச்சந்திரனின் தந்தை ராஜூ (69), தாய் நாகலட்சுமி (59), மனைவி முத்துமாரி (30), மகன்கள் சிவசங்கரன் (9), சற்குரு (2) ஆகியோர் இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.
     மனுவை விசாரித்த நீதிபதி சி. கதிரவன், லாரி காப்பீடு செய்யப்பட்டுள்ள மதுரை சோழமண்டலம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் கார் காப்பீடு செய்யப்பட்டுள்ள மும்பை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து, ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு ரூ.17.62 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com