ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நூதன முறையில் நகை, பணம் திருட்டு
By DIN | Published on : 20th June 2017 06:29 AM | அ+அ அ- |
சிவகாசியில் திங்கள்கிழமை ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நூதனமான முறையில் 19 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. ஒரு லட்சத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.
சிவகாசி அரசு மருத்துமனை அருகே பெரியகுளம் காலனியில் வசிப்பவர் ஓய்வு பெற்ற போராசிரியர் பரமானந்தம்(70). இவரது மனைவி திலகம். திங்கள்கிழமை பகலில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் பரமானந்தம் வீட்டிற்கு வந்து, தன்னை நகராட்சி துப்பரவுப் பணியாளர் எனவும், உங்கள் வீட்டில் கழிவறை தொட்டி அடைப்பை சரி செய்யுமாறு உயர் அதிகாரி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.
எந்த அதிகாரி என பரமானந்தம் கேட்டபோது, அந்த நபர் செல்லிடப்பேசி மூலம் பேசி, பேராசிரியர் வீட்டிற்கு வந்து விட்டேன். நீங்கள் கூறிய வேலைகளை செய்து முடித்து விட்டு வருகிறேன் எனக் கூறினாராம். இதை நம்பிய பரமானந்தம், வீட்டினுள் வரச்சொல்லி பணியை செய்யச் சொல்லியுள்ளார். உடல்நலத்துக்காக மருந்து சாப்பிடுவதால் அவர் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். வீட்டுப் பணியாளரும், திலகமும் துப்புரவு பணியாளரின் பணியை மேற்பார்வையிட்டுள்ளனர்.
அப்போது அந்த நபர், குளியலறையில் தண்ணீரை ஊற்றுங்கள், அடைப்பு எங்கிருக்கிறது என நான் பார்க்கிறேன் எனக் கூறி வெளியில் சென்றுள்ளார். சுமார் 30 நிமிடம் ஆகியும் காணாததால் நகராட்சிக்கு பரமானந்தம் போன் செய்து, துப்பரவுப் பணிக்கு அனுப்பினீர்களா என கேட்டராம். நகராட்சியிருந்து அப்படி யாரையும் நாங்கள் அனுப்பவில்லை என கூறியதையடுத்து சந்தேகம் அடைந்து பீரோவைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த 19 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பரமானந்தம் அளித்த புகாரின் பேரில் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் வி.கண்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, அது ரயில்நிலையம் வரை சென்று நின்று விட்டது. தடயவியல் நிபுணர்கள் கைரேகையை ஆய்வு செய்தனர். சம்பவம் தொடர்பாக சிவகாசி நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் மரியகுளோரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.