விருதுநகர் கிராம நிர்வாக அலுவலர்கள் மே 23 ஜமாபந்தியை புறக்கணிக்க முடிவு
By DIN | Published on : 21st May 2017 12:26 AM | அ+அ அ- |
கிராம நிர்வாக அலுவலர்களை மரியாதைக் குறைவாக நடத்தியதால், மாவட்ட வருவாய் அலுவலரைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் மே 23}இல் நடைபெற உள்ள ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயத்தை புறக்கணிக்க உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் முருகேசன் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் சனிக்கிழமை அவர் தெரிவித்ததாவது:
ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜபாளையம் குறு வட்டத்திற்கான வருவாய் தீர்ப்பாயம் கடந்த மே 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில், தணிக்கை அதிகாரியாக மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் கலந்து கொண்டார். அவர், கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்களை மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும், பொது மக்கள் முன்னிலையில் ஒருமையில் பேசியதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பெண் அதிகாரி ஒருவரை இரவு 11 மணி வரை பணி செய்ய வற்புறுத்தியதாகவும், அதை கேட்கச் சென்ற சங்க பிரதிநிதிகளை ஒருமையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதுவரை 8 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழியர் விரோத போக்கை கடைபிடிப்பதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இதற்கு முடிவு காணும் வரை வரும் மே23 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 9 தாலுகாக்களில் நடைபெற உள்ள ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர்கள் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.