விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடிநீர் இல்லாமல் வீரர்கள் அவதி

விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வசதி இல்லாமல் விளையாட்டு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வசதி இல்லாமல் விளையாட்டு வீரர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்த மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கைப்பந்து, கால்பந்து, கபடி, வாலிபால், கூடைப்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வருவது வழக்கம். ஏற்கெனவே, கால்பந்து மற்றும் ஹாக்கி மைதானத்தில் புல், செடிகள் வளர்ந்து இருப்பதால் வீரர்கள் விளையாட முடியாத நிலையுள்ளது. அதேபோல் ஸ்குவாஷ் மைதானத்தின் தரை தளம் சேதமடைந்திருப்பதால், விளையாட்டு வீர்ரகள் வேறு இடங்களுக்கு சென்று விளையாடி வருகின்றனர்.
 மேலும், கூடைப்பந்து மைதானத்தில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதாலும் விளையாட முடியாத நிலையுள்ளது. இந்நிலையில், குறுவட்டம், மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால், இங்குள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் தேக்கப்படுவது இல்லை. இதனால், விளையாட்டு வீரர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கடைகளுக்கு சென்று பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பருகி வருகின்றனர். இதனால், நான்கு வழிச்சாலையில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 எனவே, மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் குடிநீர் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com