மம்சாபுரத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஏடீஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், ஏடீஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
     இதனையொட்டி, காந்திநகரில் உள்ள பள்ளியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுகாதார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
    இந்த முகாமைத் தொடக்கி வைத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அலுவலர் எஸ். கலா விழிப்புணர்வு உரையாற்றியதாவது:
    தமிழக அரசு ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏடீஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மம்சாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வார்டுகள், பள்ளி, அரசு அலுவலக வளாகங்களில் ஏடீஸ்  கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, அதனை அழிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் இதரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நிலவேம்பு குடிநீர், உப்புக் கரைசல் ஆகியவை வழங்கப்படுகின்றன. அத்துடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகளுக்கு சாப்பாட்டுடன் கஞ்சி சேர்த்து வழங்கப்படுகிறது.
    ஏடீஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை வாரம் ஒருமுறையாவது கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துவதுடன், கொசுக்கள் உள்ளே புகாவண்ணம் மூடி வைத்திடுவது,  தங்கள் வீட்டின் வெளியிலும், சுற்றுப்புறத்திலும் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதோடு, தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வது, வீட்டில் உள்ள கீழ் நிலை நீர் சேமிக்கும் தொட்டியை மூடுவது  உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
    வைரஸ் காய்ச்சல் நோய் குறித்து எந்தவித அச்சமும் பயமும் கொள்ளத் தேவையில்லை என்றும், அனைத்து காய்ச்சல் வகைகளையும் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும். காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக  எவ்வித  மருத்துவமும் மேற்கொள்ளாமல், காய்ச்சல் கண்டவுடன் மம்சாபுரம்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையோ, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையையோ உடனே அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
    பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மாணவர்கள் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர். சுகாதார ஆய்வாளர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com