ராஜபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நிதி கையாடல் வழக்கு: ஓவர்சீயர், உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவணங்களை போலியாக தயாரித்து 70,685 ரூபாயை மோசடி செய்த வழக்கில்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவணங்களை போலியாக தயாரித்து 70,685 ரூபாயை மோசடி செய்த வழக்கில், ஊராட்சி உதவியாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஓவர்சீயருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்டத் தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.  
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி உதவியாளராக இருந்த ஐ. யேசுதாசன், வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த கே. ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த பி.ஜி. அய்யாபிள்ளை, ஓவர்சீயராக (என்.ஆர்.இ.பி.) பணிபுரிந்த சி. பாலசுப்பிரமணியம் மற்றும் ஓவர்சீயராக பணிபுரிந்த கே. முத்துமுனியாண்டி ஆகிய 5 பேரும் சதித்திட்டம் தீட்டி, 15.5.1995 முதல் 11.8.1995 வரையிலான பல்வேறு கால கட்டங்களில், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிருஷ்ணாபுரம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஆகிய இடங்களில் தெருக்களை சுத்தம் செய்தல், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளுக்காக நிதியை செலவிட்டதாகவும், பணியாளர்களை நியமிக்காமலேயே நியமித்து அவர்களுக்கு கூலி வழங்கியதாகவும் போலியாக ஆவணங்களை தயாரித்து, ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ரூ. 70,685 நம்பிக்கை மோசடி செய்து கையாடல் செய்துள்ளனர்.   
அரசாங்கத்தினை ஏமாற்றி தங்களது சொந்த லாபத்துக்காக கையாடல் செய்து, அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியாக, அலுவலர்கள் 5 பேர் மீதும் விருதுநகரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.     இந்த வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த போதே, ராஜ்குமார், அய்யாபிள்ளை, பாலசுப்பிரமணியம் ஆகிய மூவரும் இறந்துவிட்டனர். இதனால், இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அற்றுப் போய்விட்டன.
தற்போது வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் எட்டாக்காபட்டி ஊராட்சி உதவியாளராகப் பணிபுரிந்து வரும் ஐ. யேசுதாசன், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஓவர்சீயர் கே. முத்துமுனியாண்டி ஆகியோர் மீதான வழக்குத் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை நீதிபதி ஆர். வசந்தி விசாரித்தார். அவர் அளித்த தீர்ப்பு விவரம்: இருவர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ. 85 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com