'பட்டாசு கடைகளில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'

பட்டாசுக் கடைகளில் உராய்தல் ஏற்படுவதைத் தடுக்க, வண்ண மத்தாப்பு மற்றும் கேப் வெடிகளை தனித்தனியே அடுக்கவேண்டும் என, துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் வலியுறுத்தியுள்ளார்.

பட்டாசுக் கடைகளில் உராய்தல் ஏற்படுவதைத் தடுக்க, வண்ண மத்தாப்பு மற்றும் கேப் வெடிகளை தனித்தனியே அடுக்கவேண்டும் என, துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் வலியுறுத்தியுள்ளார்.
சிவகாசி வெடிபொருள்கட்டுப்பாட்டுத் துறை சார்பில், பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.வெடிபொருள்கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி சுந்தரேசன் சிறப்புரையாற்றியதாவது:
பட்டாசுக் கடைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள எடை அளவுக்கு மேல் பட்டாசுகளை வைக்கக் கூடாது. கடைகளில் அமைக்கப்பட்டுள்ள அவரசகால பாதையை மறைத்து பண்டல்களை வைக்கக் கூடாது. பட்டாசு பண்டல்களை லாரியிருந்து இறக்கும் போதும், ஏற்றும் போதும் சுமைப் பணியாளர்கள் கவனமாகப் பணியாற்ற அறிவுறுத்தப்பட வேண்டும். சுமைப் பணியாளர்கள் மது அருந்திவிட்டு வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. அவர்கள் கடையில் வேலை செய்யும் போது புகைபிடிக்கக் கூடாது. பட்டாசு கடைப் பகுதியில் புகைபிடிக்கக் கூடாது. மாதிரி பட்டாசு வெடித்து பார்க்கக் கூடாது உள்ளிட்ட எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்க வேண்டும்.
கடையிலோ, கடைக்கு அருகிலோ மெழுகுவர்த்தி, விளக்கு மற்றும் மின்சாதனம் கொண்டு பேக்கிங் வேலை செய்யக்கூடாது. பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை கடையில் வைத்து தயாரிக்கக் கூடாது. பட்டாசு கிப்ட் பாக்ஸில் வண்ண மத்தாப்பு மற்றும் கேப் வெடிகள் வைக்கக் கூடாது. அதுபோல, கடையிலும் வண்ண மத்தாப்பு மற்றும் கேப் வெடிகளை தனித்தனியே அடுக்கி வைக்க வேண்டும். முறையாக உரிமம் பெற்று தயாரிக்கப்பட்ட பட்டாசுகளையே வாங்கி விற்பனை செய்யவேண்டும்.இருப்பு பதிவேடு முறைப்படி எழுதி அன்றாடம் பதிவு செய்ய வேண்டும்.
பட்டாசு கடைகளை வாடகைக்கோ, குத்தகைக்கோ விடக்கூடாது. பட்டாசுக் கடைகளில் மின்சார விபத்து ஏற்படுவதைத் தடுக்க தானியங்கி மின்சாதனத்தை கடைகளில் பொருத்த வேண்டும். இதன்மூலம், மின்கசிவினால் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வியாபாரம் செய்யவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com