7 ஆண்டுகளாக நத்தைபோல் நகரும் திட்டம்: விருதுநகர் மாவட்ட கிராமப்பகுதிகளுக்கான தாமிரவருணி கூட்டுக்குடிநீர்த் திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

விருதுநகர் மாவட்டத்தில் 7 ஆண்டுகளாக நடக்கும் தாமிரவருணி கூட்டுகுடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 7 ஆண்டுகளாக நடக்கும் தாமிரவருணி கூட்டுகுடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தபட்டுள்ள நிலையில் கிராமப்பகுதிகளுக்கும் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு திட்டமிட்டது.அதன்படி மாவட்டத்தில் உள்ள சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 755 கிராம குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ. 158 கோடி மதிப்பீட்டில் இத்திடத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2010-ஆம் ஆண்டு துவங்கபட்டது.
ஆனால் பணிகள் தொடங்கிய சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாறியது. இதையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாத்தூர் வெங்கடாசலபுரம் கிராமத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் இத்திட்டத்திற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். அதன்பிறகும் பணிகள் வேகம் எடுக்கவில்லை. ஆந்திராவை சேர்ந்த நிறுவனம் இப்பணிகளை டென்டர் எடுத்திருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 'மெகா சைஸ்' குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள், தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளும் கிடப்பில் போடப்பட்டன. வெறும் 30சதவீத பணிகளை மட்டும் முடித்துவிட்டு கிடப்பில் போட்டதால் தாமிரவருணிக் கூட்டுக்குடிநீர் திட்டம் கேள்விக்குறியானது. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரியம் ஆந்திர நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதற்கு மாறாக புதிதாக சிறு நிறுவனங்களிடம் பணிகளை பிரித்து ஒப்படைக்க முடிவு செய்தது. இதனை எதிர்த்து ஆந்திர நிறுவனம் நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் திட்டப் பணிகளை தொடர்ந்து நடத்துவதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகமந்த நிலை நீடித்து வருகிறது. தற்போது நீதிமன்ற தடை நீங்கிய நிலையில், பணிகளை முடிக்க குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்தது.
இதற்காக கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 70 சதவிகித பணிகளை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிடம் குடிநீர் வடிகால் வாரியம் ஒப்படைத்துள்ளது. ஆனாலும் பணிகள் மெல்ல நடைபெற்று வருகின்றன. இதனால் சாத்தூர் அருகே உள்ள சத்திரபட்டி,சாத்தூர் பைப்பாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலையோரத்திலும், தனியாருக்கு சொந்தமான இடங்களில் போடப்பட்ட குழாய்கள் கடந்த நான்கு வருடங்களாக அப்படியே கிடக்கின்றன. இந்த குழாய்களை அகற்ற வேண்டும் அல்லது பணிகளை மக்களுக்கு பயன்பெறுவகையில் விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், தாமிரவருணி கூட்டுகுடிநீர் திட்ட பணிக்கான இரண்டாவது டெண்டர் கடந்த மார்ச் மாதம் சென்னை தனியார் நிறுவனத்திடம் விடபட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.சிந்தபள்ளி,வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாத்தூர் புறவழிச்சாலை வழியாக நகராட்சி குடிநீர் குழாய்கள் செல்வதால்,வேறு வழியாக தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்க வழிவகை செய்யபட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் 50 சதவிகித பணிகள் முடிந்துள்ளன. மேலும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com