சம உரிமை உத்தரவாதம் இருந்தும் பெற்றோரை சார்ந்து வாழும் மாற்றுத்திறனாளிகள்!: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு

இந்திய அரசியல் சாசனம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல், சமூக, பொருளாதார சுதந்திரம் வழங்கியுள்ள போதிலும் அவர்கள் பெற்றோரை சார்ந்தே வாழும் நிலையே நீடிக்கிறது என உச்சநீதிமன்ற

இந்திய அரசியல் சாசனம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல், சமூக, பொருளாதார சுதந்திரம் வழங்கியுள்ள போதிலும் அவர்கள் பெற்றோரை சார்ந்தே வாழும் நிலையே நீடிக்கிறது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.கோபால கெளடா தெரிவித்தார்.
விருதுநகரில் சனிக்கிழமை ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை அமைப்பின் (என்பிஆர்டி) இரண்டாவது தேசிய மாநாடு அதன் தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கெளடா தொடக்கி வைத்துப் பேசியது:
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 6 முதல் 18 வயதுள்ள மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு இலவச கல்வியை கட்டாயமாக்கியுள்ளது. 2016 இல் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் மாற்றுத் திறனாளிகள் பொருளாதார சுதந்திரம் பெற வேண்டும் என்பதை அரசு நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
அதை நாட்டின் பிரதமரும், முதல்வர்களும், நீதிபதிகளும், ஆட்சித் தலைவர்களும் அமல்படுத்த கடமைப்பட்டவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மறுப்போர் மீது வழக்குத் தொடுக்கவும் இந்த சட்டம் வகை செய்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்காக மாவட்ட அளவில் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது. இந்திய அரசியல் சாசனம், குடிமக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ள சமூக பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளை மாற்றுத்திறனாளிகளும் பெற வேண்டும். சமத்துவத்தையும், சம வாய்ப்புகளையும் நம்முடைய சட்டங்கள் உறுதி செய்துள்ளன.
கேசவானந்தபாரதி மற்றும் கேரள மாநில அரசுக்கு இடையிலான வழக்கில் 1973 ஆம் ஆண்டில் 13 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அமர்வு, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டஅனைத்து குடிமக்களின் பல்வேறு உரிமைகளையும், வாய்ப்புகளையும் உத்தரவாதம் செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளை பாதுகாத்திட அவர்களது குறைபாடுகளை விரைவில் கண்டறிய 2016 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் பிரிவு 25 -இன் படி சம்பந்தப்பட்ட அரசுகளும் உள்ளூர் அதிகாரிகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வரையறுத்துள்ளது. அதன்படி ஊனம் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிய ஆய்வுகள் நடத்த வேண்டும். ஊனம் ஏற்படுவதை தடுக்க வழிவகுக்க வேண்டும். குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிய ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து குழந்தைகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பிரசவத்திற்கு முன்பும் தாய் சேய் பாகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் போன்றவற்றை கட்டாயமாக்கியுள்ளது என்றார் அவர்.
இதை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை போராடி தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் மாநாட்டு பிரதிநிதிகள் மெளன அஞ்சலி செலுத்தினர்.ஞாயிற்றுக்கிழமையும் மாநாடு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com