மாதம் இரு முறை குடிநீர் விநியோகம்: விருதுநகரில் சிவகாமிபுரம், பர்மா காலனி மக்கள் தவிப்பு

விருதுநகர் நகராட்சியில் பர்மா காலனி, சிவகாமிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மாதத்திற்கு இரு முறை மட்டும் குறைந்த நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்வதால், அப்பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு

விருதுநகர் நகராட்சியில் பர்மா காலனி, சிவகாமிபுரம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மாதத்திற்கு இரு முறை மட்டும் குறைந்த நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்வதால், அப்பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சி சார்பில் மதுரை சாலை, ராமமூர்த்தி சாலை, வி.என்.பி.ஆர். பூங்கா ஆகிய பகுதிகளில் பிரதான மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் உள்ளன. அதேபோல், அன்னை சிவகாமிபுரம், அஹமது நகர், பட்டுத் தெரு, நாராயணமடம் தெரு, பவுண்டு தெரு, குல்லூர்சந்தை சாலை உள்ளிட்ட பல இடங்களில் சிறிய அளவிலான மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் உள்ளன. இவற்றின் மூலம் விருதுநகர் முழுவதும் 90 பகுதிகளாக பிரித்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல பகுதிகளில் குடிநீரானது 7 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அன்னை சிவகாமிபுரம் பகுதியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. இதன் மூலம், பர்மா காலனி, சிவகாமிபுரம், பெருமாள்கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, ஒளவையார் தெரு, கொல்லர் தெரு முதலான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு, தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை மட்டுமே ஏற்ற முடியும் என கூறப்படுகிறது.
எனவே, பர்மா காலனி உள்ளிட்ட ஏழு பகுதிகளுக்கு மாதத்திற்கு இரண்டு முறையே குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இப்பகுதியில் இரண்டு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதால், பொதுமக்கள் தண்ணீரை பிடித்து சேமித்து வைக்கும் நிலையுள்ளது. இதில், உருவாகும் கொசுக்கள் கடிப்பதால் பலர் காய்ச்சலால் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, அன்னை சிவகாமிபுரம் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து, சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு மாதத்திற்கு ஆறு முறையாவது குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com