அருப்புக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published on : 13th January 2018 08:31 AM | அ+அ அ- |
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
ஆத்திபட்டி கிராமம் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜூலு (63). இவரது மனைவி ஜெயலட்சுமி (59). சுப்புராஜூலு தனியார் நூற்பாலையில் கணக்கராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஜெயலட்சுமி சத்துணவுப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்கள் இருவரும் ஒரு வாரத்துக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, திருச்சியில் உள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இவரது வீட்டுக் கதவு திறந்திருப்பதைக் கண்ட பக்கத்துவீட்டினர், திருச்சியிலிருந்த சுப்புராஜூலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்ததன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டனர். பின்னர், வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 பவுன் நகைகளும், வெள்ளிப் பொருள்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும், விருதுநகரிலிருந்து வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.