விருதுநகரில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி

விருதுநகரில் விவசாயிகளுக்கான நீர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

விருதுநகரில் விவசாயிகளுக்கான நீர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
      விருதுநகர் பொதுபணித் துறை வளாகத்திலுள்ள பொறியாளர் இல்லத்தில், தமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம் (திருச்சி) மூலம் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, ஆட்சியர் அ. சிவஞானம் தலைமை வகித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
      தமிழக அரசு வேளாண்மைத் துறை மூலம் மழைநீரை சேகரித்து விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் இயற்கைக்கு சேதம் விளைவிக்காமல், தங்களின் நிலத்தின் தன்மையை பரிசோதனை செய்து, நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, அந்த நிலத்துக்கேற்ப, தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப பயிர் செய்து லாபம் பெற்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுதான் இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
      வேளாண்மைக்கு பாசனநீர் மிகவும் இன்றியமையாதது. இந்த நீரை விவசாயிகள் பயிரிடும் பயிர்களின் தேவைக்கேற்ப முறையாகப் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை அமைத்து, மழைநீரை சேமிக்க வேண்டும். 
குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தி, அதிக மகசூல் தரக்கூடிய சொட்டுநீர் பாசனத்தை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்.
விவசாயிகள் மண்வள அட்டையை பெற்று, அந்த மண்ணின் தன்மைக்கேற்ப உரங்களை சரியாக பயன்படுத்தி லாபம் பெறவேண்டும். அதேபோல், விவசாயிகள் அவர்களது நிலத்தில் நன்மை தரக்கூடிய பூச்சிகளை வளர்த்து, தீமை செய்யக்கூடிய பூச்சிகளை அழிக்க வேண்டும். அதிக வீரியம் உள்ள மருந்துகள் பயன்படுத்துவதை குறைத்து, வேம்பு சார்ந்த உரங்களை பயன்படுத்தினால் கசப்பு தன்மைக்கு பூச்சிகள் வராது.   இயற்கை உர பயன்பாட்டை  பயன்படுத்தி மகசூலை அதிகப்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சியில் மிகச்சிறந்த வல்லுநர்கள் பாசனநீர் மேலாண்மை, மானாவாரி உற்பத்தியில் மழைநீர் சேகரிப்பு, சொட்டுநீர் உரப் பாசனம், நீர் சேமிப்பு முறையில் மரம் நடுதல் தொழில்நுட்பம், மண் மற்றும் பாசனநீர் பரிசோதனை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் கால்நடைகள் பராமரிப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை விளக்க உள்ளனர். எனவே, விவசாயிகள் இந்தப் பயிற்சியில் முழுஈடுபாட்டுடன் பங்கேற்று, தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். 
 இந்நிகழ்ச்சியில், திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய தலைமை இயக்குநர்அப்துல் ரஷீது, இணை இயக்குநர் (வேளாண்மை) சுப்பிரமணியன், பேராசிரியர் (வேளாண்மை பொறியியல்) கணேசன், இணைப் பேராசிரியர் (வேளாண்மை பொறியியல்) நவகோடி உள்பட வோளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com