ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில், நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில், நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்-மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஸ்ரீவில்லிபுத்தூர்
வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு மக்காச்சோளம், பயறு சாகுபடி மற்றும் வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர் க. சுப்பிரமணியன் தலைமை வகித்து,
மானாவாரியில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு 100 விவசாயிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் பயிர் மக்காச்சோளம் சாகுபடி, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் இரண்டாம் பயிரான பயறு சாகுபடி என்ற வழிமுறையின் அடிப்படையில் அரசு மானியம் வழங்கப்படும் என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கா. பாஸ்கரராஜ் வரவேற்று, இத்திட்டத்தின் சிறப்பியல்புகள், மானியத் திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்தும் முறைகளைப் பற்றி விளக்கினார். துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) பு. மரியரெக்ஸ், மாநிலத் திட்டப் பணிகள் மற்றும் விதைப் பண்ணை அமைத்தல் பற்றி விளக்கினார்.
துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வி. தவமுனி அரசு செயல்படுத்தும் மானியத் திட்டங்கள் பற்றி விளக்கினார். துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) கிருஷ்ணகுமாரி, உழவர் ஆர்வலர் குழு மற்றும் உற்பத்தியாளர் குழு அமைப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மம்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரா. கார்த்திகேயன் என்ற விவசாயிக்கு ரூ. 62,500 மானியத்தில் விசை உழுவை இயந்திரத்தை, வேளாண்மை இணை இயக்குநர் க. சுப்பிரமணியன் வழங்கினார்.
பருத்தி ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை உதவிப் பேராசிரியர் ரா. வீரபுத்திரன், விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடியில் மக்காச்சோளம் மற்றும் பயறு சாகுபடியில் ஆய்வு செய்யப்பட்ட மண் மாதிரி முடிவுகள் அடிப்படையில் உரம் இடுதல், கோடை உழவுக்கு பின் 5 டன் தொழுஉரம் இடுதல், தரமான விதைகள் தேர்வு செய்தல், உயிர் உரங்கள் கொண்டு விதைநேர்த்தி செய்தல் போன்ற தொழில்நுட்பங்கள் கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றி விளக்கினார்.
பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் சசிகுமார், மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடியில் குருத்துப்பூச்சி, சாம்பல் வண்டு மற்றும் அசுவினி பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும், உளுந்து சாகுபடியில் சாறு உறுஞ்சும் பூச்சி, மற்றும் காய்ப்புழுவினை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் விளக்கினார்.
நோயியல் துறை பேராசிரியர் ரா. விமலா, நோய் தாக்கம் மற்றும் பூச்சி தாக்கத்தின் அறிகுறிகள் பற்றியும், பயறு சாகுபடியில் அதிகம் தாக்கக்கூடிய மஞ்சள் தேமல் நோய் மற்றும் வாடல் நோய் பற்றியும், அதனைக் கட்டுப்படுத்தும் முறை பற்றியும் விளக்கினார்.
ராஜபாளையம் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் எம். முருகன், விவசாயிகளுக்கு வெள்ளாடு வளர்ப்பு குறித்த தொழில்நுட்பங்களான இளம் ஆடுகள் வாங்கும் முறை பற்றியும், பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும் எடுத்துரைத்தார். பயறு சாகுபடியில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு இமிடாகுளோபைடு கொண்டு விதை நேர்த்தி செய்வது குறித்த செயல் விளக்கத்தை, உதவி வேளாண்மை அலுவலர் பே. சரவணன் செய்துகாண்பித்தார்.
அதைத் தொடர்ந்து, வயல்வெளி பயணம் சென்று மண்புழு உரம் தயாரிப்பு கூடம் மற்றும் வெள்ளாடு வளர்ப்பு குறித்து, வங்காருபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருடைய பண்ணைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் பே. சரவணன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com