மாணவர்கள் உயர்கல்வி படிக்க வங்கிகள் ரூ.49 லட்சம் கல்விக் கடன்: விருதுநகர் ஆட்சியர் வழங்கினார்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு ரூ.49.2 லட்சம் மதிப்பில் உயர்கல்வி கடனுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெள்ளிக்கிழமை வழங்கினார். 

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 மாணவ, மாணவிகளுக்கு ரூ.49.2 லட்சம் மதிப்பில் உயர்கல்வி கடனுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெள்ளிக்கிழமை வழங்கினார். 
 விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (மாவட்ட முன்னோடி வங்கி) இணைந்து கல்விக்கடன் முகாமை நடத்தின. 
   இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்துப் பேசியதாவது: 
   மாணவர்கள் உயர்க் கல்வி கற்பதற்கு போதுமான பொருளாதார வசதிகள் இல்லாத சூழ்நிலைகள் நிலவும் பட்சத்தில், தமிழக அரசு, அவர்களுக்கு உயர்க்கல்வி கற்க கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதேபோல், மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு, வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென உருவாக்கப்பட்ட இணைய தளத்தில் மாணவர்கள் தங்களது பெயர், செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மூலமாக மாணவர்கள் அந்த இணையதளப் பக்கத்தில் தங்களது கல்வி தகுதியினை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். வங்கிகள் அத்தகவலை பார்த்து, விண்ணப்பித்த நபர் தகுதியானவராக இருந்தால் அவர்களுக்கு உயர்க்கல்வி கற்க கல்விக்கடன் வழங்கும்.  பள்ளி நிலையில் மாணவர்கள் எந்த ஒரு பாடத்தையும் முழுமையாக புரிந்து படிக்கும் போது, உயர்கல்வி கற்கும் போது மிகவும் எளிமையாகவும் இருக்கும்.  பல்வேறு துறைகள் மூலமாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சியில் மாணவர்கள் கலந்து கொண்டு, தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
முன்னதாக, இம்முகாமில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 20 மாணவ, மாணவிகளுக்கு ரூ.49.02 லட்சம் மதிப்பில் உயர்கல்வி கற்பதற்கான கல்விக்கடன் ஆணைகளை ஆட்சியர் வழங்கினார். இம்முகாமில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கலைச்செல்வன், கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com