தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேலதொட்டியபட்டி பகுதியில் இயக்கப்படும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேலதொட்டியபட்டி பகுதியில் இயக்கப்படும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால், அந்த ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் மனு அளித்தனர்.
    அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மேலதொட்டியபட்டி, கம்பத்துபட்டி, மங்காபுரம், பெருமாள்பட்டி, பசும்பொன் நகர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். மேலும், ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறோம்.
     இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் மேலதொட்டியபட்டியைச் சேர்ந்த ஒருவர் தனக்குச் சொந்தமான கிணற்றில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாகத் தெரிவித்தார். மேலும், இதிலிருந்து எடுக்கப்படும் குடிநீரை ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் விற்பனை செய்வதாகத் தெரிவித்தார். அதையடுத்து அவர், அப்பகுதியில் 3 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க முயற்சி செய்தார். இதற்கு, பொது மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை கைவிட்டார்.
     ஆனால், தற்போது 10 ஆழ்துளைக் கிணறு அமைத்து, தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்து, வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். அதேபோல், தற்போது மற்றொருவரும் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளார். இதனால், எங்களது விவசாயப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது.
     மேலும், ரசாயனம் கலந்த கழிவு நீர் வெளியே கொட்டப்படுவதால், விவசாய நிலங்கள் பாதிப்பதுடன், ஏராளமானோர் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  இந்த பாதிப்பு காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தனியார் சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதுடன், அவற்றை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.
    அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன், மாவட்டச் செயலர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com