சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிப் பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரிக்கை

சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகளுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து, தண்ணீர்

சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகளுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்து, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சிகள், திருவேங்கடம் பேரூராட்சி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளையம், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ 543.20 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின்படி தாமிரவருணி ஆற்றின் அருகே நீர் எடுப்பு கிணறுகள் அமைத்து அவற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு, மானூர், பணவிடலி ஆகிய இடங்களில் சேகரித்து, சுத்திகரிக்கப்பட்டு பின்னர் குழாய்கள் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
சிவகாசி நகராட்சியில் 2017 ஆம் ஆண்டின் மக்கள்தொகை சுமார் 80 ஆயிரம் எனவும், இது 2032 ஆம் ஆண்டில் 95 ஆயிரமாக உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் தேவை என்ற அடிப்படையில் சிவகாசி நகராட்சிக்கு 12.82 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. தற்போது 3.66 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் மேலும் 9.16 மில்லியன் லிட்டர் தினமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு நிலையான நகர்புறவளர்ச்சி திட்டம் மூலம் ரூ. 117.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.
திருத்தங்கல் நகராட்சியில் 2017 ஆம் ஆண்டு மக்கள் தொகை சுமார் 61 ஆயிரமாகும். இது 2032 ஆம் ஆண்டில் 72 ஆயிரமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு 9.72 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். தற்போது 2.88 மில்லியன் லிட்டர் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. தாமிரவருணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் 6.84 மில்லியன் லிட்டர் தினமும் வழங்கப்பட உள்ளது. திருத்தங்கல் நகராட்சிக்கு இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ 88.91 கோடியாகும்.
இந்த திட்டத்துக்கு தற்போது குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே இத்திட்டத்துக்காக இப்பகுதியில் செயல்பட்டு வந்த பொறியாளர் அலுவலகம் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே குழாய் பதிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளன.  இந்த குழாய் பதிக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும், இத் திட்டத்தை விரைந்து முடித்து, சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகளுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com