விருதுநகரில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டுவதால் குடிநீர் குழாய்கள்  சேதம்

விருதுநகரின் முக்கிய சாலை மற்றும் தெருக்களில் கேபிள் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்படுவதால் குடிநீர்

விருதுநகரின் முக்கிய சாலை மற்றும் தெருக்களில் கேபிள் பதிப்பதற்காக சாலைகள் தோண்டப்படுவதால் குடிநீர் குழாய் இணைப்பு சேதமடைந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 விருதுநகர் நகராட்சிக்கு உள்பட்ட மேலரதவீதி, கிருஷ்ணமாச்சாரி சாலை சந்திப்பு, பிள்ளையார் கோயில் தெரு  முதலான பகுதிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியின் சாலையோரம் தொலைபேசி கேபிள் பதிக்க தனியார் நிறுவனம் சார்பில் பள்ளம் தோண்டி வருகின்றனர். இதற்கான அனுமதி விருதுநகர் நகராட்சி அதிகாரிகள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனியார் நிறுவனத்தினர், பிள்ளையார் கோவில் தெருவில் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் சாலைகளை பெயர்த்து குழி தோண்டினர். 
    இதனால், அப்பகுதியில் இருந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக, அப்பகுதியில் ஏராளமான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், தற்போது மேலரத வீதியில் உள்ள தார்ச் சாலையை உடைத்து குழி தோண்டி வருகின்றனர். ஏற்கனவே, கிருஷ்ணமாச்சாரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால் மேலரத வீதி வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. 
      தற்போது இப்பகுதியில் பகல் நேரங்களில் பள்ளம் தோண்டுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் இரவு நேரங்களில் கேபிள் பதிக்கவும், சேதமடைந்த சாலைகளை தனியார் நிறுவனம் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com