ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 5 புதிய பேருந்துகள் இயக்கம்

விருதுநகர் மண்டலத்துக்கான 5 புதிய பேருந்துகளை ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை

விருதுநகர் மண்டலத்துக்கான 5 புதிய பேருந்துகளை ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.  
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விருதுநகர் மாவட்ட மக்களின் போக்குவரத்து  தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் 25 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 வழித்தடங்களுக்கான புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 12 புதிய பேருந்துகள் விரைவில் ராஜபாளையம், சிவகாசி பகுதிகளில் தொடக்கி வைக்கப்படவுள்ளன. விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெற தேவையான அனைத்துத் திட்டங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு உடனுக்குடன் செய்து வருகிறது. முக்கூடல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஒன்றியத்திலுள்ள கிராமப் பகுதிகளுக்கும், சேத்தூர், செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியபுரம், வ.புதுப்பட்டி, கொடிக்குளம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் நகராட்சிக்கு ரூ.197.79 கோடியிலும், சிவகாசி நகராட்சிக்கு ரூ.117.34 கோடியிலும், திருத்தங்கல் நகராட்சிக்கு ரூ.88.91 கோடியிலும் ஆக மொத்தம் ரூ.404.04 கோடியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், விருதுநகர், அருப்புக்கோட்டை , சாத்தூர் நகராட்சிகளிலும் ரூ.450 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வுப்பணிகள் நிறைவடைந்து, பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 755 கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.234 கோடியில் பணிகள் நிறைவு பெற்று, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
மேலும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரூ.4 கோடியில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். வத்திராயிருப்பில் புதிய போக்குவரத்து பணிமனைக்கான கட்டுமானப் பணிகள்  விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றார் அவர்.
இப்புதிய பேருந்துகளில் சிவகாசி - கோயம்புத்தூர் வழித்தடத்துக்கு ஒரு பேருந்தையும், ராஜபாளையம் - மேட்டுப்பாளையம் வழித்தடத்துக்கு 2 பேருந்துகளையும், ராஜபாளையம் - கோயம்புத்தூர் வழித்தடத்துக்கு ஒரு பேருந்தையும்,  ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை - செங்கோட்டை வழித்தடத்துக்கு ஒரு பேருந்தையும் என மொத்தம் 5 புதிய பேருந்துகளை அமைச்சர் தொடக்கி வைத்தார். 
விழாவுக்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சேனாதிபதி, பொதுமேலாளர்   மகேந்திரகுமார், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com