புத்தகத்தை பார்த்து வீட்டிலேயே பிரசவம் அரசு மருத்துவமனையில் தாய், சேய் அனுமதி: சுகாதாரத் துறையினர் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புத்தகத்தை பார்த்து, வீட்டிலேயே பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரசவத்தில் சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புத்தகத்தை பார்த்து, வீட்டிலேயே பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பிரசவத்தில் சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து அறிந்த சுகாதாரத்துறையினர், போலீஸார் உதவியுடன், தாயையும், சேயையும் மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அன்சலி பாத்திமா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை அன்சலி பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அவரது கணவர் முகமது தாஜூதீன், புத்தகங்களைப் பார்த்து ஆயுர்வேத மருத்துவ முறைப்படி, வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
அதில், அன்சலி பாத்திமாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், நச்சுக் கொடியை அறுக்க இயலாமல் கஷ்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதையடுத்து, சிவகாசி சுகாதார இணை இயக்குநர் ராம் கணேஷ் மற்றும் மருத்துவக் குழுவினர், முகமது தாஜூதின் வீட்டுக்குச் சென்று, தாய், சேய் நலம்
கருதி உடனடியாக மருத்துவமனையில் சேர்க்குமாறு வலியுறுத்தினர். ஆனால், அதற்கு முகமது தாஜூதீன் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு, நீண்டநேர போராட்டத்துக்குப் பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் சேர்க்கப்பட்டனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து முகமது தாஜூதீனிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரே புத்தகங்களைப் படித்து, பிரசவம் பார்த்தது அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com