பட்டாசுகளை பாதுகாப்புடன் கையாள்வது எப்படி? லாரி உரிமையாளர்களுக்கு அதிகாரி விளக்கம்

பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து லாரி செட் உரிமையாளர்களுக்கு  சிவகாசி வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை

பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து லாரி செட் உரிமையாளர்களுக்கு  சிவகாசி வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி ஜி.சுந்தரேசன் விளக்கினார்.
சிவகாசிப் பகுதியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பல லாரி செட்டுகள் உள்ளன. இந்த லாரி செட்டுகளுக்கு பட்டாசு இருப்பு வைப்பதற்கு வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரால், கிட்டங்கிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அனுமதிபெற்று பட்டாசு கிட்டங்கிகளை வைத்திருக்கும் லாரி செட் உரிமையாளர்களுக்கு, பட்டாசு பண்டல்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம், சிவகாசி வெடிபொருள் கட்டாடுபாட்டுத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடத்தப்பட்டது. 
அப்போது அதிகாரி சுந்தரேசன் பேசியதாவது:
பட்டாசு கிட்டங்கிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவை இருக்குமிடத்திலிருந்து 15 மீட்டர் தூரம் செடி, கொடி, புல் மற்றும் புதர் இல்லாமல் பராமரிக்க வேண்டும். கிட்டங்கியில் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் இடி தாங்கிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். வெண்டிலேட்டர்களில் பொருத்தப்பட்டுள்ள வலைகள் சரியாக இருக்கிறதா என் கவனிக்க வேண்டும். கட்டடத்தினுள், அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டுமே பண்டல்களை வைக்க வேண்டும். பட்டாசு பண்டல்களை அடுக்கும் போது, போதிய இடைவெளி விட வேண்டும். 
பண்டல்களில் அதன் குறியீடுகளையும், அதில் உள்ள பட்டாசு விபரங்களையும் எழுதி ஒட்ட வேண்டும். பண்டல்களை உயரமாக அடுக்கிவைத்திருக்கும் பட்சத்தில் மர ஏணிகளை உபயோகித்து அதனை எடுக்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியின்போது மது அருந்தவோ, புகை பிடிக்கவோ அனுமதிக்ககூடாது. கலர் மத்தாப்பூ மற்றும் கேப்வெடி பண்டல்களை மற்ற பட்டாசு பண்டல்களுடன் வைக்காமல் தனியே வைக்க வேண்டும். பட்டாசு பண்டல்களை லாரியிருந்து இறக்கும் போதும், ஏற்றும் போதும் சுமைதூக்கும் தொழிலாளர்களை கவனமாக செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட லாரி செட் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com