காரைக்காலில் முடங்கிய சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள்

புதுவை மாநில சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் காரைக்கால் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.

புதுவை மாநில சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் காரைக்கால் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.
புதுவை மாநிலத்தின் கடற்கரை நகரங்களில் ஒன்றான காரைக்கால் சிறந்த சுற்றுலா ஸ்தலங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆன்மிக சுற்றுலாவுக்கு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான சனீஸ்வரன் கோயில் மற்றும் பொழுதுபோக்குக்கு கடற்கரை, துறைமுகம் என சிறப்புகளை கொண்டிருந்தாலும், சுற்றுலாத்துறை தலைவர் (உதவி இயக்குநர்) பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளதால், இந்த துறை தொடர்பான பணிகளுக்கு எந்தவொரு திட்டமிடலும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதனால் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.
தங்கும் விடுதி: காரைக்கால் கடற்கரையில் ரூ.3.5 கோடியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வணிக வளாகம் கட்டப்பட்டு முறைப்படி திறக்கப்பட்டது. இதற்கு வரவேற்பு இல்லாததால் மேலும் ரூ.3.5 கோடி செலவில் தங்கும் விடுதியாக மாற்றும் பணிகள் நடைபெறுகின்றன. காலக்கெடு முடிந்தும் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை.
காரைக்கால் கடற்கரையை மேம்படுத்தும் திட்டங்களை முந்தைய முதல்வர் என்.ரங்கசாமி அறித்தார். இவற்றுக்கு மத்திய சுற்றுலாத்துறை மூலமே நிதி பெற்று அமல்படுத்தப்படும் எனஅறிவிப்போடு முடிந்துவிட்டது. இதனால் காரைக்கால் கடற்கரையில் உள்ளூர், வெளியூர் மக்கள் பொழுதுபோக்க எந்தவொரு மேம்பட்ட வசதியும் இல்லாமல் போய்விட்டது.
கடற்கரை அருகே இயற்கையாக தண்ணீர், அலையாத்திக் காடு சுமார் 25 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கின்றன. இதில் பருவகால வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. இதை மேம்படுத்தி, சுற்றுலாவினர் வருவதற்கேற்ப மேம்படுத்தும் திட்டம் செய்யலாம் என்ற கருத்து நிலவுகிறது.
படகு சவாரி: காரைக்கால் கடற்கரை வரை செல்லும் வகையில் அரசலாற்றில் படகு சவாரி செய்யும் அமைப்பு உள்ளது. காரைக்கால் படகு குழாமில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் இருந்த நிலையில் தற்போது, 2 படகுகள் மட்டுமே உள்ளன.
படகுத் துறை (ஜெட்டி) பயன்படுத்த முடியாத நிலையில் சிதைந்து காணப்படுகிறது. படகில் ஏறவே மக்கள் அச்சப்படும் நிலை நீடிக்கிறது. அரசலாற்றுப் பாலம் அருகே கடற்கரை சாலை முகப்பில் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான பழைமையான கட்டடம் உள்ளது. இதை சுற்றுலாவினர் ஈர்க்கும் வகையில் பல்நோக்கு சிறப்பம்சங்கள் கொண்ட திட்டங்களை உள்ளடக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.
திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் பகுதியில் உள்ள ஏரியை சுமார் ரூ.6 கோடி திட்டத்தில் சுற்றுலாவினரை ஈர்க்கும் பகுதியாக மாற்றி, கடந்த 2014-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. ஏரி தூர்வாரப்படவில்லை. ஏரியில் படகுகள் விடுவதற்கேற்ற சூழல் ஏற்படுத்தப்படவில்லை. நல்லம்பல் ஏரிக்கு செல்ல எந்தவொரு போக்குவரத்து வசதியும் இல்லை. இதனால், தொலைநோக்குத் திட்டமில்லாமல் அரசு நிதி இதற்காக வீணடிக்கப்பட்டுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது மது அருந்துவோருக்கும், சமூக விரோத செயலில் ஈடுபடுவோருக்கும் சாதகமான பகுதியாக மாறியிருக்கிறது. விவசாயத்துக்கு பருவமழை காலத்தில் வரும் தண்ணீரை ஏரியில் தேக்கிவைத்தால்கூட, பெரும் பயன் பலருக்கு கிட்டும். இதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படவில்லை.
புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ளதைப்போன்று, காரைக்கால்
எல்லைப்புறங்களில் (வாஞ்சூர், பூவம்) வரவேற்பு நுழைவுகளை அலங்காரமாக அமைக்கவேண்டும் என்ற யோசனையும் அரசால் நிறைவேற்றப்படவில்லை.
திருநள்ளாறு கோயில் வெகுவாக பக்தர்களை ஈர்க்கும் விதத்தில் இருந்தும், பக்தர்கள் தரமான, சுகாதாரமான உணவு கிடைக்காமலும், வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த வசதியின்றியும், தரமான விடுதிகள் கிடைக்காமலும் அவதிப்படுகின்றனர். சுற்றுலாத் திட்டத்தின் அடிப்படையில் திருநள்ளாறு பகுதியை மேம்படுத்தும் எந்த ஏற்பாடும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை.
துறைமுகம்: காரைக்கால் தனியார் துறைமுகம் நிலக்கரி இறக்குதலின் மூலம் பெரும் லாபம் ஈட்டுகிறது. சமூக பொறுப்புணர்வுத் திட்டம் உள்ளிட்டவற்றால், காரைக்காலில் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவ, துறைமுகத்தை புதுச்சேரி அரசு பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஐ.அப்துல்ரஹீம் கூறியது: யூனியன் பிரதேசத்தின் மற்ற பிராந்தியங்களைக் காட்டிலும் காரைக்கால் பிராந்தியம் சுற்றுலா மேம்பாட்டில் பின்னடைந்து உள்ளது. மத்திய அரசின் நிதியால் முன்பு மேம்படுத்தப்பட்ட கடற்கரை சாலை உள்ளிட்ட நடைமேடைகள்கூட பராமரிக்கப்படாததால், சுற்றுலாவினரை முகம் சுளிக்கச் செய்கிறது. ஆளுநரும், முதல்வரும் அதிகார மோதல்களைத் தவிர்த்து, மக்கள் விரும்பும் வகையில் செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்தால் மட்டுமே காரைக்கால் சிறந்த நிலையை எட்டும் என்றார்.
நாகப்பட்டினம் பகுதியில் நாகூர், வேளாங்கண்ணி ஆகிய வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலாவினர் காரைக்காலுக்கும் வருகின்றனர். காரைக்காலில் என்.ஐ.டி., ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பயில்கின்றனர். எனவே காரைக்காலில் பன்முக வசதிகளை மேம்படுத்த புதுச்சேரி அரசு சிறப்புத் திட்டத்தை வகுக்கவேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com