டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் அரசு மருத்துவமனையில் இல்லை: எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை தரும் வகையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை நிலை இல்லை எனவும், இந்த விவகாரத்தில் அரசு சீரிய கவனம்

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை தரும் வகையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை நிலை இல்லை எனவும், இந்த விவகாரத்தில் அரசு சீரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா குற்றம்சாட்டினார்.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் சார்பு ஆட்சியர் ஏ. விக்ராந்த் ராஜாவை ஆட்சியரகத்தில்  வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பேரவை உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறியது :
பருவமழைக்கு முன்பு காரைக்காலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. மழையினால் இது கட்டுக்குள் இருந்தது. தற்போது ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மீண்டும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களில் 10 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனைக்குச் சென்றனர். இவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை.
இந்த நோயாளிகளை தனியாக வைத்து சிகிச்சை தரும் வசதியும் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர் வரை போதுமான அளவில் அரசு பொது மருத்துவமனையில் இல்லை. ரத்தத்தில் உள்ள செல் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ரத்தத்தில் பிளேட்லெட்ஸ் பிரிக்கும் கருவிகளும் அரசு பொது மருத்துவமனையில் இல்லை. இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள், உடனடியாக புதுச்சேரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்னையை உடனடியாக சீர்செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வசதி படைத்தோர் வெளியூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஏழை, நடுத்தர மக்கள் காரைக்கால் மருத்துவமனையை நம்பியிருக்கும்போது, இதன் தகுதி குறைபாட்டால் அவர்களது நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
டெங்கு காய்ச்சல் பிரச்னைக்கு காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவமனையுடன் அரசு பொது மருத்துவமனை ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டு சிகிச்சை அளிக்கலாம். ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை காரைக்காலில் செயல்படும்போது, இங்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை தரக்கூடிய வசதிகளை ஜிப்மர் மூலம் ஏற்படுத்தலாம். இதுகுறித்து புதுச்சேரி முதல்வரும், நலவழித்துறை அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பிரச்னை குறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர், சார்பு ஆட்சியர், மருத்துவமனை நிர்வாகத்தினர் அடங்கிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார் அசனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com