வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்கக் கோரிக்கை

கடந்த ஆண்டுக்கான வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வருக்கு காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டுக்கான வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வருக்கு காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் பி. ராஜேந்திரன், புதுச்சேரி முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம் : கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால், காரைக்கால் பகுதியை வறட்சி மாவட்டமாக புதுச்சேரி அரசு அறிவித்து, ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் அளிப்பதாக கூறியது. தமிழகத்தில் இதுபோன்ற வறட்சி நிவாரணம்  தரப்பட்டுவிட்டது. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போது சம்பா பயிர்கள் மழையினால் பாதித்துள்ளன. பெரும்பாலான இடங்களில் 2-ஆவது முறையாக நடவு செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பு செய்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. கடந்த ஆண்டுக்கான நிவாரணம் தற்போது கிடைத்தால், விவசாயிகளுக்கு ஓரளவு இழப்பை ஈடுகட்ட முடியும். அரசு பொறுப்பேற்ற பின்னர், கூட்டுறவு கடனை ரத்து செய்வதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது. துணைநிலை ஆளுநர் இதில் முட்டுக்கட்டை போட்டதால், மத்திய அரசை அணுகி, கடன் ரத்துக்கு மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்ற ஆணையை பெற்றுள்ளீர்கள். எனவே, கடந்த ஆண்டுக்கான கூட்டுறவு கடனை கூட்டுறவு சங்கங்களில் செலுத்துவதன் மூலம் புதிய கடன் விவசாயிகளால் வாங்க முடியும். இதற்கான நடவடிக்கையை புதுச்சேரி அரசு விரைவுபடுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடுக்கான பிரிமியத் தொகையை அரசே செலுத்தும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதன்படி, அரசே காப்புத் தொகையை செலுத்தியது. அதுபோல, நிகழாண்டுக்கும் அரசே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பீடுத் தொகை காலம் கடந்து விவசாயிகள் கணக்கில் வரவு செய்யப்பட்டாலும், இதற்கு முயற்சி எடுத்த வேளாண் துறை அமைச்சருக்கு காரைக்கால் விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மேலும், சில விவசாயிகளுக்கு காப்பீடுத் தொகை முழுமையாகவும், பலருக்கு குறைந்த அளவும் வரவு வைக்கப்பட்டுள்ளது. இழப்பு யார் யாருக்கு எவ்வளவு, எந்த பகுதிக்கு குறைவு, எந்த பகுதிக்கு முழுமையாகத் தரப்பட்டுள்ளது போன்றவற்றை வேளாண் துறையானது விவசாயிகளுக்கு விளக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com