நலிவடைந்த ஆலையில் பணியாளர் நியமன விவகாரம்: பாமக எதிர்ப்பு

நலிவடைந்த கூட்டுறவு நூற்பாலைக்கு, கொல்லைப்புறமாக கூடுதலாக பணியாளர் நியமனம் செய்யும் புதுச்சேரி அரசின் முயற்சியை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

நலிவடைந்த கூட்டுறவு நூற்பாலைக்கு, கொல்லைப்புறமாக கூடுதலாக பணியாளர் நியமனம் செய்யும் புதுச்சேரி அரசின் முயற்சியை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, காரைக்கால் மாவட்ட பாமக செயலரும், ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை பாட்டாளி தொழிற்சங்க கௌரவத் தலைவருமான க.தேவமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்காலில் புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை இயங்கிவருகிறது. நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஆலை, அரசின் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தற்போது நலிவடைந்துவிட்டது.
இந்த ஆலையில் 345 பேர் பணியாளர்களாக இருந்த நிலையில், 45 பேரை ஆலை நிர்வாகம் தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. ஏறக்குறைய, 300 பேர் தற்போது பணியாற்றிவருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஆட்சியின்போது 6 மாத ஊதியம் தரப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், சுமார் 100 பேர் வரை ஆலையில் சேர்க்கும் வகையில் புதுச்சேரி அரசு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தில் பணியாளராக சேர்க்கப்பட்டு, பின்னர் கூட்டுறவு நூற்பாலைக்கு மாற்றும் விதத்தில், கொல்லைப்புற நடவடிக்கையை அரசு மேற்கொண்டுவருகிறது. 
ஆலையில் தேவைக்கு மிகுதியான தொழிலாளர்கள் உள்ளதாக சிட்ரா குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், அதை பொருட்படுத்தாமல், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் திருப்திப்படுத்தும் விதமாக, எம்.எல்.ஏ. பரிந்துரைப்போருக்கு வேலை தரும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துவருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசின் இந்த முயற்சியை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தடுத்து நிறுத்தவேண்டும். இந்த போக்கில் ஆலை நிர்வாகம் சென்றால், ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் மாத ஊதியம் கிடைக்காது. ஆலையில்  வளர்ச்சி இருக்காது. புதுச்சேரி அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, நீதிமன்றத்தை அணுக பாட்டாளி தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது என அதில்
கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com