காரைக்கால் கடற்பகுதியில் தொடரும் உயிரிழப்புகள்

சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குக்காக கடலில் குளிக்க வருவோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் போவதால் காரைக்கால் கடற்பகுதியில்
காரைக்கால் கடற்பகுதியில் தொடரும் உயிரிழப்புகள்

சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குக்காக கடலில் குளிக்க வருவோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் போவதால் காரைக்கால் கடற்பகுதியில் உயிரிழப்புகள் தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.
துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், ஆறுகளின் முகத்துவாரம் கொண்டதாக காரைக்கால் கடற்பகுதி விளங்குவதால் இப்பகுதி ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 25 கி.மீட்டர் நீளத்துக்கு கடற்கரை பகுதி அமைந்திருந்தாலும், பல மீனவ கிராமங்கள் கடலோரத்தில் அமைந்திருப்பதாலும், சவுக்கு மரக்காடுகள் இருப்பதாலும் இந்த நீண்ட கடற்கரை பகுதிகளில் சுற்றுலா செல்வதற்கு வாய்ப்பு இல்லை.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள கடற்கரை மட்டுமே சுற்றுலா பயணிகளும், பொழுதுபோக்குக்காக உள்ளூர் பொதுமக்களும் பயன்படுத்தும் இடமாக உள்ளது. அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரம், கலங்கரை விளக்கக் கட்டடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை இப்பகுதியில் அமைந்துள்ளன.
பொதுமக்கள் கடலில் இறங்கி நீராடும் பகுதியாக சுமார் 300 மீட்டர் நீளமுள்ள பகுதியே  பிரதானமாக விளங்குகிறது. இந்நிலையில், அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியையொட்டிய 100 முதல் 150 மீட்டர் நீளமுள்ள பகுதி ஆபத்து நிறைந்ததாக உள்ளது. ஆறு கடலில் கலக்கும் பகுதி ஆழப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலோர காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியது:
ஆற்று முகத்துவாரத்தையொட்டிய பகுதிகளில் ரிப்-கரண்ட் என்கிற சுழற்சி அலை இருக்கும்.
இந்த சுழற்சி அலை, நமது பாதத்துக்கு கீழ்பகுதியில் உள்ள மணலை அரித்து, நின்றுகொண்டிருக்கும் நிலையை மாற்றி சாய்த்து இழுத்துச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. இதனாலேயே இப்பகுதியில் இறங்கி குளிக்க முயல்வோர் உயிரிழக்க நேரிடுகிறது.
காரைக்காலில் கடந்த 2010 முதல் 2017-ஆம் ஆண்டு வரை அரசலாறு முகத்துவாரத்தையொட்டிய பகுதியில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இங்கு வருவோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உயிரிழந்தோர் புகைப்படங்களை உறவினர் ஒப்புதலோடு, மாவட்ட காவல்துறை நிர்வாகம் கடற்கரையில் டிஜிட்டல் பதாகையாக வைத்திருந்தது.
ஆனால் இப்போது அத்தகைய விழிப்புணர்வு பதாகைகள் இல்லை. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மட்டுமே உள்ளன. இவை கூட சுற்றுலா வருவோரின் கண்களில் படுவதில்லை என்றார்.
 

பாதுகாப்பற்ற படகு பயணம்
சுற்றுலா வருவோரை மீன்பிடி படகுகளில் எவ்வித பாதுகாப்பு சாதனங்கள் இன்றி கடலுக்கு அழைத்துச் செல்வதையும் அதிகம் காணமுடிகிறது. இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டிய செயல்.
இத்தகைய பாதுகாப்பற்ற பயணம் ஆபத்தானது என்பதை சிறுவர்கள், அவர்தம் பெற்றோர் உணரும் வகையிலான விழிப்புணர்வு பதாகைகள் கடற்கரை பகுதியில் வைப்பது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை சாலை மீட்பு அமைப்புக் குழு துணைத் தலைவர் ஜெ.சிவகணேஷ் கூறியது:
காரைக்காலில் கடந்த திங்கள்கிழமை கடலில் குளித்த சிறுவனை காப்பாற்றப் போன பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர் புகழேந்தி சுழற்சி அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதைக் கருத்தில்கொண்டு இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அறியும் வகையில், தடை செய்யப்பட்ட பகுதிகளை குறிப்பிடும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.
தனியார் பங்களிப்புடன் இச்செயலை செய்ய மாவட்ட நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் முன்வரவேண்டும் என்றார்.   

இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அறியும் வகையில், தடை செய்யப்பட்ட பகுதிகளை குறிப்பிடும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும். தனியார் பங்களிப்புடன் இச்செயலை செய்ய மாவட்ட நிர்வாகம், காவல்துறை நிர்வாகம் முன்வரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com