காரைக்காலில் ஆளுநர் சைக்கிள் பேரணி: போக்குவரத்து பாதிப்பு

துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காரைக்காலில்  ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடத்தியதால், சுமார் ஒரு மணி நேரம்

துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காரைக்காலில்  ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நடத்தியதால், சுமார் ஒரு மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
காரைக்காலில் இருந்து வெளியூர் செல்வோர், வெளியூலிரிருந்து காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.
"தூய்மை காரைக்கால்' என்ற விழிப்புணர்வை சைக்கிள் பேரணி மூலம் ஏற்படுத்தும் நோக்கில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, காரைக்கால் மாவட்ட எல்லையான பூவம் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் வந்து சேர்ந்தார். இது காரைக்கால்  - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையாகும்.
ஆளுநர் வந்த நிலையில், சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறையிலிருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் வடக்குப்புறாக எல்லையில் நிறுத்தப்பட்டன. அதேபோல் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் நகரப் பகுதியிலிருந்து புதுச்சேரி, சென்னை செல்லக்கூடிய நெடுந்தூர பேருந்துகள், சிதம்பரம், மயிலாடுதுறை, பொறையாறு பகுதிக்குச் செல்லக்கூடிய பேருந்துகள் உள்ளிட்டவை காரைக்கால் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதேபோல், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களையும் காரைக்கால் பேருந்து நிலையம் முதல் பூவம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க போலீஸார் அனுமதிக்கவில்லை.
இந்த தடையானது 6 முதல் 7 மணி வரை நீடித்தது. காலை 7 மணியளவில் ஆளுநர் உள்ளிட்ட பேரணியில் பங்கேற்றோர் நகரப் பகுதியை கடந்துவிட்ட நிலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
பூவம் பகுதியில் வந்திறங்கிய ஆளுநர், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்திருக்கும் நிலையை அறிந்தும், ராஜ்நிவாஸ் என்ற சேனலுக்கு விழிப்புணர்வு கருத்துகள் தெரிவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரை அழைத்து பேட்டி கொடுக்கச் செய்தார். இதனால் போக்குவரத்து ஸ்தம்பிப்புக்கு கூடுதல் நேரமானதாக புகார் கூறப்பட்டது. குறித்த நேரத்தில் பேருந்துகள் சம்பந்தப்பட்ட ஊர்களை சென்றடைய முடியாமல் வாகன ஓட்டிகளும், வாகனத்தில் இருந்த பயணிகளும் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகினர்.
காலை 6 மணிக்கு என்.சி.சி. மாணவர்களும், என்.எஸ்.எஸ். மாணவர்களும் நகரிலிருந்து 7 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள பூவம் பகுதியில் இருக்க வேண்டும் என்பதற்காக 5.30 மணிக்கே அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அதிகாலை 4.30 மணி முதல் பல்வேறு ஊர்களில் இருந்தும் மாணவர்கள் ஆயத்தமானார்கள். இது மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com