உள்ளாட்சி ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை தங்களுக்கும் அமல்படுத்தக்கோரி, உள்ளாட்சி ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை தங்களுக்கும் அமல்படுத்தக்கோரி, உள்ளாட்சி ஊழியர்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசின் ஒரு அங்கமாகவுள்ள உள்ளாட்சித்துறையின் கீழ் இயங்கும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் எனக் கூறி, காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கடந்த 10-ஆம் தேதி முதல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகராட்சி மற்றும் திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி, திருப்பட்டினம் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் காரைக்கால் நகராட்சி அலுவலக வாயிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு கட்டமாக கடந்த வாரம் வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை 5-ஆம் நாள் போராட்டமாக, நகராட்சி அலுவலக வாயிலில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  6-ஆம் நாள் போராட்டமாக ஊழியர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை திரண்டு, தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ஜெய்சிங் உள்ளிட்டோர் பேசினர்.
மேலும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கே. கோவிந்தராஜ், வி. ஆனந்தன், மதிமுக மாவட்ட செயலர் சோ. அம்பலவாணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அரசு. வணங்காமுடி,  மமக மாவட்ட தலைவர் ஐ. அப்துல்ரஹீம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை  ஆதரித்துப் பேசினர்.  நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன் பேசியது: உள்ளாட்சி ஊழியர்களுக்கும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்றலாம் என அரசு அமைத்த குழுத் தலைவர் பரிந்துரை செய்துவிட்டார். ஆனால், நிறைவேற்ற அரசு முன்வராமல் உள்ளது. இதுதொடர்பாக சங்க நிர்வாகிகள் உள்ளாட்சித் துறை அமைச்சரை சந்தித்துப் பேசியபோது, நிறைவேற்ற நாங்கள் தயார், ஆனால் முதல்வர் இசைவு தெரிவிக்க வேண்டும் என்றார். முதல்வரைச் சந்தித்துப் பேசியபோது,  உள்ளாட்சித் துறை அமைச்சர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்வாறாக சங்க நிர்வாகிகளை இருவரும் காரணமின்றி அலைக்கழித்தனர்.
இதன் காரணமாகவே போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.  எங்களது போராட்டம் மக்கள் பாதிப்படையும் வகையில் அமைக்கப்படவில்லை. குறிப்பாக, கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் எங்களது நிர்வாகத்தின்கீழ்தான் வருகிறது. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு இதில் இடையூறு ஏற்படுத்தவில்லை. எனவே காலம் கடத்தாமல், உரிய அறிவிப்பை அரசு செய்ய வேண்டும்.காரைக்காலில் நகராட்சி, பஞ்சாயத்து ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவார்கள் என்றார் ஷேக் அலாவுதீன்.
ஊழியர்களின் விடுப்புப் போராட்டத்தால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com